தமிழகம்

திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்றும் நிகழ்வில் பரபரப்பு - நடந்தது என்ன?

போலீஸ் தடையை மீறி கோயிலை நோக்கி இந்து முன்னணி, பாஜகவினர் புறப்பட்டதால் பரபரப்பு.

சுப.ஜனநாயகச் செல்வம்

மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று (டிச.3) மலையில் உச்சிப்பிள்ளையார் கோயில் முன்புள்ள தீபத்தூணில் மாலை 6.05 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை. இந்து முன்னணி, பாஜகவினர் திரண்டு போலீஸாரின் தடைகளை உடைத்து கோயில் நோக்கி புறப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்றும் உயர் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படாத நிலையில், சிஐஎஸ்எப் போலீஸ் பாதுகாப்புடன் மனுதாரர்களும் தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நவ.25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி டிச.4-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

தினமும் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் காலை, மாலையில் புறப்பாடு நடைபெற்றது. காலையில் தங்க சப்பரம், மாலையில் தங்கமயில், தங்க குதிரை, பூத வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினர். அதனையொட்டி எட்டாம் நாளான நேற்று பட்டாபிஷேகம் நடைபெற்றது. முக்கிய விழாவான தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று காலையில் சிறிய வைரத் தேரோட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், வழக்கம்போல் உச்சிப்பிள்ளையார் கோயில் முன்பு தீபம் ஏற்றவதுபோல், மலை உச்சியிலுள்ள தீபத்தூணியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.

அதனையொட்டி நீதிமன்ற உத்தரவுப்படி மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்குரிய நெய், காடாத்துணி போன்றவற்றை பிற்பகல் 3.30 மணியளவில் கோயில் பணியாளர்கள் கொண்டு சென்றனர். இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன் தலைமையில் அக்கட்சியினர் திரண்டு மாலை 5 மணியளவில் 16 கால் மண்டபம் முன்பு அமர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடினர். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பலத்த போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மாலையில் 6 மணியளவில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாலதீபம் ஏற்றப்பட்டது. அதன் பின்பு உச்சிப்பிள்ளையார்கோயில் முன்புள்ள தீபத்தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவுப்படி மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை. இதனால், இந்து முன்னணியினர், பாஜகவினர் திரண்டு போலீஸாரின் தடைகளை உடைத்து 16 கால் மண்டபம் வரை முன்னேறினர். அங்கு 16 கால் மண்டபம் முன்பு போலீஸாருக்கும் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின் தடைகளை மீறி வீரவேல், வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என கோஷங்கள் எழுப்பியவாறு கோயிலை நோக்கி சென்றனர். இதனால் சுமார் அரைமணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் 6.30 மணியளவில் மாநகர் காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் தலைமையில் கோயில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மலை உச்சியிலுள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பாஜக குற்றச்சாட்டு: பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்து மக்களுக்கு கிடைத்த வெற்றியாக தற்போது நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. தீபத்தூணில் தீபத்தை ஏற்ற விடாமல் தடுக்க திமுக சதி செய்கிறது. மதுரை எம்பி சு.வெங்கடேசன் கார்த்திகை தீபமா, கலவர தீபமா என்று சொன்னதை வன்மையாக கண்டிக்கிறோம். 1996-ல் இதேபோல் சு.வெங்கடேசன் திருப்பரங்குன்றம் குறித்து பேசியதால் விரட்டி அடிக்கப்பட்டதை சுட்டிக் காட்டுகிறேன்.

கலவர தீபம் என்று சொல்ல எம்.பி.க்கு யார் அதிகாரம் கொடுத்தது? இந்து மதம் மீது நம்பிக்கை இல்லாதபோது இந்து மதம் குறித்து பேச அவருக்கு உரிமை இல்லை. இந்து மதத்தை சீண்ட வேண்டாம் என எம்.பி-யை எச்சரிக்கிறோம். சிறுபான்மையினரின் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக இந்துக்களை கொச்சைப்படுத்த வேண்டாம். சு.வெங்கடேசனால் திமுக இந்துக்களின் வெறுப்பை சம்பாதிக்கிறது. மேல்முறையீட்டுக்கு எதற்காக செல்கிறீர்கள் என்று மக்களிடம் சொல்ல வேண்டியது அமைச்சரின் கடமை” என்றார்.

SCROLL FOR NEXT