தமிழகம்

“திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்” - புதுச்சேரி அதிமுக

அ.முன்னடியான்

புதுச்சேரி: “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மக்களிடையே மதக்கலவரத்தை தூண்டும் செயலில் ஈடுபட்டுள்ள தமிழக திமுக அரசை மத்திய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.” என புதுச்சேரி அதிமுக வலியுறுத்தியுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9 -ம் ஆண்டு நினைவு நாள் புதுச்சேரி அதிமுக சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி உப்பளம் அம்பேத்கர் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்தக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன் தலைமையில் அவைத் தலைவர் அன்பானந்தம் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்ட அதிமுகவினர் பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்துக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் புதுச்சேரி நகராட்சி அலுவலக வளாகத்தில் அரசு சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்துக்கும் அஞ்சலி செலுத்தப்படட்டது. ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

பின்னர் மாநிலச் செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழகத்தில் ஆட்சி நடத்தும் திமுக அரசு எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு மதரீதியில் திட்டமிட்டு மோதல் போக்கை கடைபிடித்து உள்ளது.

திருப்பரங்குன்றத்தில்  தீபம் ஏற்றுவது சம்பந்தமாக நடைபெற்ற வழக்கில் தனி நீதிபதி அளித்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு பெரும்பான்மை இந்து சமுதாய மக்களுக்கு எதிராக மேல்முறையீட்டுக்கு சென்றது. உயர் நீதிமன்ற மதுரை கிளை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது.

அதன் பிறகு தீபம் ஏற்றுவது சம்பந்தமாக நீதிபதியால் அளிக்கப்பட்ட தீர்ப்பை திட்டமிட்டு அவமதிக்கின்ற விதத்திலும் அமைதி தவழும் தமிழகத்தில் மதரீதியில் கலவரத்தை தூண்டுகின்ற விதத்திலும் திமுக முதல்வர் ஸ்டாலினுடைய கைப்பாவையாக காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் கோயில் நிர்வாக அதிகாரிகளின் செயல்பாடு அமைந்துள்ளது.

இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது ஒவ்வொரு மாநில அரசின் கடமையாகும். ஆனால் கடந்த இரண்டு தினங்களில் மூன்று முறை நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆட்சி அதிகார மமதையில் நீதிமன்றத்தின் உத்தரவை காலில் போட்டு மிதிக்கும் ஒரு ஜனநாயக படுகொலையை தமிழக திமுக அரசின் முதல்வராக ஸ்டாலின் செய்து உள்ளார்.

இது நீதித்துறையை அவமதிப்பதோடு மட்டுமில்லாமல் நீதித்துறையின் மீது நடத்தப்படும் நேரடி போராகும். இந்திய அரசியல் சாசனத்துக்கு நேர்மாறான செயலை தமிழக திமுக  அரசு செய்துள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மக்களிடையே மதக்கலவரத்தை தூண்டும் செயலில் ஈடுபட்டுள்ள தமிழக திமுக அரசை மத்திய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.”

தீர்ப்பளித்த நீதிபதியை பற்றியும், நீதிபதியின் தீர்ப்பை பற்றியும் தவறாக தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து வரும் தமிழக நீதித்துறை அமைச்சர் ரகுபதியையும், திமுகவின் ஒரு சில கூட்டணிக் கட்சி தலைவர்களையும்  உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும்.” என்றார். 

SCROLL FOR NEXT