தமிழகம்

திருப்​பரங்​குன்​றம் தீப வழக்​கு: ஆக.3-ல் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றம் விசாரணை

கி.மகாராஜன்

சென்னை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை நாளன்று தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு திங்கட்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் திருக்கார்த்திகை நாளான கடந்​தாண்டு டிசம்பர் 3-ம் தேதி தீபம் ஏற்​றக் ​கோரி மதுரையை சேர்ந்த ராம ரவி​கு​மார் உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்​வில் மனுத்தாக்​கல் செய்​தனர்.

அந்த மனுக்களை விசா​ரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத்​தூணில் கார்த்திகை திருநாள் அன்று தீபம் ஏற்ற வேண்​டுமென கடந்த 2025 டிசம்பர்1-ம் தேதி உத்​தர​விட்​டார்.

ஆனால், இந்த உத்​தரவு நிறைவேற்​றப்​ப​டாத நிலை​யில், மதுரை மாவட்ட ஆட்​சி​யர், மாநகர் காவல் ஆணை​யர் மற்றும் கோயில் செயல் அலு​வலர் ஆகியோ​ருக்கு எதி​ராக நீதி​மன்ற அவம​திப்பு வழக்கு தொடரப்​பட்​டது.

இதையடுத்து ஆட்​சி​யர், காவல் ஆணை​யர், செயல் அலுவலர் ஆகியோர் நீதி​மன்​றத்​தில் ஆஜராகி நீதி​மன்ற தீர்ப்பை நிறைவேற்​றாததற்​காக வருத்​தம் தெரி​வித்​தனர்.

இதனைத் தொடர்ந்து, தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசும், அவமதிப்பு நடவடிக்கையை எதிர்த்து அதிகாரிகளும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு செய்தனர்

அந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த மதுரை அமர்வு, அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

அதேவேளையில், ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை திருநாளன்று திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது.

இதனையடுத்து, தனி நீதிப​தி​யின் உத்​தரவை உறுதி செய்து மதுரை அமர்வு பிறப்​பித்த உத்​தர​வுக்கு எதி​ராக கோயில் நிர்​வாகம் தரப்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்யப்பட்டது.

அதேபோல், திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் பிரதான மனுதாரரான ராம ரவிக்குமார் சார்பில், மதுரை அமர்வின் இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில் இடம் பெற்றுள்ள மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற எத்தனை பேரை அனுமதிக்கலாம் என்பது குறித்து தொல்லியல் துறையுடன் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை நீக்க கோரி மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல்.எம்.பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் ஆகஸ்ட் 3-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

SCROLL FOR NEXT