திருமாவளவன்
தருமபுரி: நல்லிணக்க உறவை திமுக தொடராததால் தான் அந்தக் கூட்டணியில் இருந்து விசிக உள்ளிட்ட கட்சிகள் வெளியேறும் நிலை ஏற்பட்டதாக தருமபுரியில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விசிக தலைமை நிலையச் செயலாளர் தமிழ்ச்செல்வன் இல்லத் திருமண விழா தருமபுரியில் நேற்று நடந்தது. இதில் திருமாவளவன் பேசியதாவது: கூட்டணி மாறிவிட்டோம் என்பதுபோல இன்று நமக்கு துரோகி பட்டம் கட்டி காழ்ப்புணர்ச்சி, வன்மத்தைப் பரப்புகிறார்கள். 1999-ல் நம்மை தேர்தல் அரசியலுக்கு மூப்பனார் இழுத்து வந்தார். அதன் பின்னர் திமுக, அதிமுக என சூழலுக்கு ஏற்ப கூட்டணியில் இடம்பெற்றோம்.
நம் இயக்கத்தில் இருந்த ஆதவ் அர்ஜுனா, ‘2026 சட்டப் பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக உங்களை முன்னிலைப் படுத்தி பிரச்சாரம் மேற்கொள்ளலாம்’ என தெரிவித்தார். அந்த முடிவை நான் ஏற்றிருந்தால் அதிமுக-பாஜக கூட்டணி வலுவடைந்திருக்கும். அன்று திமுக கூட்டணி உடைந்துவிடக் கூடாது என்பதால் அதற்கு நான் இடம் தரவில்லை.
இந்நிலையில், கூட்டணிக் கட்சிகளிடையே நல்லிணக்கம், நல்லுறவை பேணி பாதுகாக்கும் பொறுப்பு கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிக்குத் தான் உள்ளது. காங்கிரஸ்- திமுக உறவு கசந்தது ஏன், இடதுசாரிகள், 70 ஆண்டுகளாக கூட்டணியில் இருந்த ஐயுஎம்எல் ஆகியவை வெளியேறியது ஏன், மதிமுகவை சொந்தச் சின்னத்தில் போட்டியிட திமுக ஏன் அனுமதிக்கவில்லை. கமல்ஹாசனுக்கு உரிய இடங்களே ஒதுக்கப்படவில்லை.
திடீரென கூட்டணிக்குள் வந்த தேமுதிகவுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மற்ற கட்சிகளுக்கு முன்பைவிட தொகுதிகள் குறைக்கப்பட்டன. இந்த இறுக்கமான அணுகுமுறை பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை. அதே போல, திமுக தான் எங்களை கைவிட்டுவிட்டது, நாங்களாக திமுக கூட்டணியில் இருந்து வெளியேறவில்லை. தேர்தல் வெற்றி, தோல்விகளை விட நல்லிணக்க உறவு தான் முக்கியம்.
விஜய்யை நான் ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்தேன். அவர் ஆட்சி அமைக்க அதிமுக, பாஜக, பாமக ஆதரவை நாடாமல் காங்கிரஸ், இடதுசாரிகளை அவர் உள்வாங்கிக் கொண்டார். எனவே, இனி விசிக அங்கே தான் இருக்க வேண்டுமென முடிவெடுத்தோம். தவெக தலைமையிலான கூட்டணிக்கு, ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என பெயரிடப்பட்டது. இதிலுள்ள ‘மதச்சார்பற்ற’ என்ற வார்த்தையை இடம்பெறச் செய்தது நான்தான். இந்தக் கூட்டணிக் கொள்கை, கோட்பாட்டின் அடிப்படையில் உருவாகி இருக்கிறது. இவ்வாறு பேசினார்.