மதுரை: “வெற்றி பெற்ற பிறகு அதிகாரப் பகிர்வு குறித்து பேசலாம். வெற்றிக்கு குந்தகம் விளைவிக்கும் எந்தவித முயற்சியும் செய்யக் கூடாது என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடக்கும் 'காந்தியை மறவோம்' என்ற நிகழ்வில் பங்கேற்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “பாஜகவின் பிடிக்குள் அதிமுக போய்விட்டது. அந்தக் கட்சியே காவி மயமாகிறது. ஏற்கெனவே இது குறித்த கவலையை வெளிப்படுத்தியுள்ளேன். பெரியார் பாசறையில் தோன்றிய இயக்கம், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் தலைமையில் இயங்கிய ஒரு திராவிட இயக்கம் தற்போது சங்பரிவார்களின் பிடியில் இருப்பது என்பது கவலை அளிக்கிறது.
அதிமுக வெற்றி பெற்றால் ஆர்எஸ்எஸ் தான் நாட்டை ஆளும். இதுபற்றி அவ்வப்போது சுட்டிக்காட்டி இருக்கிறேன். திருவள்ளுவருக்கு காவி பூசக்கூடிய வேலையை துணிச்சலாக முன்னாள் முதல்வர் பழனிசாமி சமூக ஊடகப் பக்கத்தில் பதிவு செய்யக்கூடிய அளவுக்கு நிலைமை மாறி இருப்பது வேதனை அளிக்கிறது. தற்போது அதனை அப்புறப்படுத்தி இருக்கின்றனர் எனும் செய்தி ஆறுதலளிக்கிறது. ஆனாலும், அதிமுக தலைவர்கள் கவனமாக, எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். இல்லையேல் அவர்கள் தமது சுய அடையாளத்தை இழக்க நேரிடும்.
திமுக கூட்டணியில் உரிய நேரத்தில் தோழமைக் கட்சிகளை அழைத்துப் பேசுவர். அப்போது விடுதலை சிறுத்தைகளிடமும் பேசுவர். அப்போது அந்தக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி எங்களுக்கான தொகுதிகளை கேட்டுப் பெறுவோம். சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை அமையும் என நம்புகிறேன்.
திமுக கூட்டணி இப்போது மேலும் வலுவடைந்திருக்கிறது. தேமுதிக இந்தக் கூட்டணியில் இணைந்து இருப்பதை வரவேற்கிறோம். அதுபோன்று ஓபிஎஸ் தலைமையிலான அணியும் திமுக கூட்டணிக்கு வரும் வாய்ப்பிருப்பதாக தகவல் கூறுகிறது. ஓபிஎஸ் வந்து சேர்ந்தால் மிக்க மகிழ்ச்சி. வரவேற்பதில் விசிக பெரு மகிழ்ச்சி அடையும். திமுக கூட்டணி நாளுக்கு நாள் ஒரு மெகா கூட்டணியாக வலுப்பெறுகிறது.
கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீடு நடக்கும்போது சில சலசலப்பு எழுவது இயல்புதான். இதனால் கூட்டணி உடைந்து சிதறும் என்று கருத தேவையில்லை. திமுக தலைமையிலான கூட்டணி தொடரும்.
இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது, புதிய அறிவிப்பு, திட்டங்கள் போன்றவற்றை எப்போதும் அறிவிப்பதில்லை என பாஜக தலைவருக்கு தெரிந்திருக்கும். ஆனாலும் திமுக மீது குற்றம் சுமத்த வேண்டும் என்றே அணுகுமுறையை கைவிடாமல் விமர்சனம் செய்கிறார்.
அரசியல் காரணத்துக்காக இந்தியை நம் மீது திணிக்கின்றனர். தனிப்பட்ட முறையில் மாணவர்கள் இந்தி கற்பதை யாரும் தடுக்கவில்லை. இந்தியை விரும்பி படிக்கும் யாருக்கும் எதிராக இங்குள்ள அரசியல் கட்சிகள் செயல்படவில்லை. அரசியல் நோக்கம், திணிக்கும் முயற்சியை எதிர்க்கிறோம்.
அதிகாரப் பகிர்வு என்பதுதான் கட்சி வளர்ச்சிக்கு பயன்படும் என்றில்லை. அதிகாரப் பகிரவும் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதன் மூலமே கட்சி வளர்ச்சி அடையும், அதனால்தான் நாங்கள் உயர்த்திப் பிடிக்கிறோம் என்பது இன்றைய அரசியல் சூழலுக்கு உகந்ததல்ல. காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் நிற்க வேண்டும்.
நாம் வெற்றி பெற்ற பிறகு நமக்குள் அதிகாரப் பகிர்வை கூறலாம். அப்போது வாதிடலாம்.வெற்றிக்கு குந்தகம் விளைவிக்கும் எந்தவித முயற்சியும் செய்யக் கூடாது என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.
நாங்குநேரி பள்ளி மாணவர் சின்னதுரை இல்லத்தில் பெட்ரோல் குண்டு வீசிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுகிறேன்” என்று திருமாவளவன் கூறினார்.