மதுரை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி பாஜக அரசு, ஒவ்வொரு குடிமகனின் குடியுரிமையையும் சோதனைக்கு உள்ளாக்கியுள்ளது.
இது கோடிக்கணக்கான மக்களின் குடியுரிமையைப் பறிக்கும். எனவே, ஜனநாயக சக்திகள் எஸ்ஐஆர் நடைமுறைக்கு எதிராக ஒருங்கிணைய வேண்டும்.
அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், அக்கட்சியில் இருந்து வெளியேறுவது பொதுச் செயலாளர் பழனிசாமிக்கும், அக்கட்சிக்கும் பின்னடைவாக அமையும்.
அவரது முடிவின் பின்னணியில் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. அதிமுகவைப் பலவீனப்படுத்தும் வகையில் பாஜக செயல்பட்டு வருகிறது. இது அதிமுகவுக்கும், தமிழக அரசியலுக்கும் நல்லதல்ல.
தமிழக ஆளுநர் மீண்டும் மீண்டும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவிக்கிறார். அவரைப் பயன்படுத்தி தமிழக அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சிப்பது கவலை அளிக்கிறது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.