சென்னை: முக்கியமான அரசியல் முடிவுகளை விசிக, இடதுசாரிகள் இணைந்தே எடுப்போம், அந்த வகையில் தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மாமேதை காரல் மார்க்ஸ் 208-வது பிறந்த நாளையொட்டி, எழும்பூர் கன்னிமரா பொது நூலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் நேற்று மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து மூவரும் அண்ணா அறிவாயலயத்துக்குச் சென்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தேர்தல் முடிவுகள் குறித்து கலந்தாலோசித்தனர்.
பின்னர் வணிக காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து விசிக மற்றும் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் நாளை (மே 7) நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து, தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மூவரும் ஆலோசனை நடத்தினர்.
இந்நிகழ்வுகளுக்கு மத்தியில் தவெகவுக்கு பெரும்பான்மை இல்லாததால் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளிக்குமா என்ற கேள்விக்கு செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:
திருமாவளவன்: விசிக மற்றும் இடதுசாரிகள் நீண்ட காலமாக மதச்சார்பற்ற அரசியல் கலத்தில் இணைந்தே பயணித்து வருகிறோம்.
எதிர்காலத்திலும் முக்கியமான அரசியல் முடிவுகளை ஒருங்கிணைந்தே எடுப்போம். தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை. தமிழகத்தில் நிலவும் சமூகநீதி அரசியல் சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
தேர்தலில் தவெகவை எங்கள் எதிர்ப்பின் இலக்காக நாங்கள் முன்னிறுத்தவில்லை. அதிமுக முதுகில் ஏறி பாஜக ஆட்சி அமைக்க நினைத்தது. அதைத் தடுக்க நாங்கள் முன்னெடுத்த முயற்சி வெற்றிபெற்றிருக்கிறது.
பெ.சண்முகம்: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பிரதானமான நோக்கம் அதிமுக - பாஜக கூட்டணியை தோற்கடிப்பது. அதில் நாங்கள் வெற்றிபெற்றிருக்கிறோம்.
மு.வீரபாண்டியன்: இடதுசாரிகள் அனைவருக்குமே, பாஜகதான் முதல் எதிரி. அரசியல் கட்சிகள் தோற்கலாம். வெற்றிபெறலாம். ஜனநாயகம் தோற்றுவிடக் கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.