திருமாவளவன்
சென்னை: “தமிழகத்தின் வளர்ச்சிக்கு புதிய விமான நிலையம் தேவை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எனவே, பொது மக்கள் பாதிப்பு அடையாமல் புதிய இடத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும்” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “புதிய விமான நிலையத்துக்கான இடத்தை தேர்வு செய்யும்போதும் அப்பகுதி மக்களின் கருத்துகளை கேட்க வேண்டும். காடுகளை அழிக்க வேண்டிய நிலையும், நீர்நிலைகளை தூர்வார வேண்டிய நிலையும் ஏற்படக்கூடும்.
இருந்தபோதிலும் விமான நிலையம், துறைமுகம், ரயில் நிலையம் உள்ளிட்ட போக்குவரத்து மற்றும் கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதன் மூலமே மாநிலத்தின் மற்றும் நாட்டின் முன்னேற்றத்துக்கு தேவையான வளர்ச்சியை ஏற்படுத்த முடியும்.
எனவே, தமிழகத்தின் வளர்ச்சிக்கு புதிய விமான நிலையம் தேவை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதேவேளையில் பொது மக்களின் இசைவைப் பெற்று, அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும் என்பதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேண்டுகோள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.