திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜனை ஆதரித்து, பெரியபாளையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, அவர் பேசியதாவது: பாஜக, இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் எதிர்த்து வெறுப்பு அரசியலை விதைக்கும் கட்சி. அதை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தோளில் தூக்கி சுமக்கிறார்.
பாஜகவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பதால், திமுகவுடன் விசிக தொடர்ந்து பயணிக்கிறது. கொள்கை அடிப்படையில்தான் இந்த கூட்டணி. திமுக கூட்டணியிலிருந்து விசிக வெளியே போனால், திமுக கூட்டணி பலவீனம் அடையும்.
அதனால், அதிமுக, பாஜக வலுவடையும். தமிழகத்தில் ஒரு காலத்தில் பாஜக ஒன்றுமே இல்லை என்ற நிலை இருந்தது. அதிமுகவால் இப்போது 11 சதவீதம் வாக்குள்ள கட்சியாக பாஜக மாறியுள்ளது.
புதுச்சேரியில் அதிமுக 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டது கடந்த கால வரலாறு. ஆனால், இப்போது பாஜக 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதிமுக இரு இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. புதுச்சேரியில் அதிமுக தேய்ந்து, பாஜக வளர்ந்துள்ளது.
தமிழகத்தில் தேர்தலுக்குப் பிறகு அதிமுக தேய்ந்து பாஜக வலிமை பெறப்போகிறது. எதனாலும் அதிமுக, பாஜக வலிமை பெற்றுவிடக் கூடாது என்ற காரணத்துக்காக, திமுக கூட்டணியில் விசிக நீடிக்கிறது.
மு.க.ஸ்டாலின் ஆட்சி தொடர்ந்தால், தமிழகம், தமிழர் பண்பாடு பாதுகாப்பாக இருக்கும்; திருவள்ளுவர், பெரியார் பாதுகாப்பாக இருப்பர். அதிமுக,பாஜக வலிமை பெற்றால் பெரியார் அரசியலை வீழ்த்துவார்கள். பெரியார் அரசியல் வீழ்த்தப்பட்டால் அம்பேத்கர் அரசியலை வீழ்த்தியதாக பொருள்.
இந்த அடிப்படையில்தான் திருமாவளவன் திமுக கூட்டணியில் தொடருகிறான். பெரம்பூரிலேயே விஜய் வெற்றி பெறுவாரா என அவருக்கே சந்தேகம் உள்ளதால், திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறார்.
விஜய்க்கு எவ்வளவு வாக்கு கிடைக்கும் என்பது நிரூபிக்கப்படாதது. பின்னர் எப்படி அவர் வெற்றி பெறுவார், ஆட்சியில் பங்கு கொடுப்பார். அது பெரிய மோசடி.இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய திருமாவளவன், விசிக நிர்வாகியின் பெண் குழந்தைக்கு வெற்றிச்செல்வி என பெயர் சூட்டினார்.
பிரச்சாரத்தின் முடிவில், திருமாவளவனுக்கு கட்சி நிர்வாகிகள் ராட்சத கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலை அணிவித்து, பூக்களை தூவினர்.