அரியலூர்: திராவிட கட்சிகளை ஒரே நேரத்தில் பலவீனப்படுத்த வேண்டும் என்ற சூது, சூழ்ச்சி அரசியலை பாஜக, ஆர்எஸ்எஸ் செய்து வருகிறது என விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
அரியலூர் மாவட்டம் அங்கனூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் இருதுருவ அரசியலை நிலைநாட்ட வேண்டும் எனும் முனைப்பு தவெகவுக்கு உள்ளது. திராவிட கட்சிகளை ஒரே நேரத்தில் பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காக திமுகவை தனிமைப்படுத்துவதுடன், அதிமுகவை அழிக்க பாஜக, ஆர்எஸ்எஸ் சூழ்ச்சி அரசியலை அரங்கேற்றி வருகிறது. மேலும், அதிமுகவை குறி வைத்துதான் அண்ணாமலையும் காய் நகர்த்தினார் அல்லது அவரை நகர்த்தி இருக்கிறார்கள்.
இந்த சூழ்ச்சி அரசியலில் தவெகவும் இணைந்துள்ளதா என தவெகவிடம்தான் கேட்க வேண்டும். சேலம் அருகே அம்பேத்கர் சிலை, அனுமதி பெற்றே வைக்கப்பட்டது. அதை மூட ஒரு கலவர சூழலை ஏற்படுத்தியதில், காவல் துறைக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வருகிறது. இந்த சம்பவத்தில் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்.
நாகர்கோவிலில் கைதி சபரிவர்மன் உயிரிழப்பு பெரும் துயரமானது. காவல் நிலையங்கள், சிறைகளில் விசாரணைக் கைதி களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு காவல் துறை, நீதித் துறை, சிறைத் துறைக்கு உள்ளது. சபரிவர்மனின் மரணத் துக்கு காரணமானவர்கள் மீது, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் எம்எல்ஏக்கள் விலை பேசப்படுகிறார்கள் அல்லது விலைக்கு வாங்கப்படுகிறார்கள் எனும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல. தவெகவிலிருந்தும் சிலரை விலை கொடுத்து வாங்க முயற்சி நடப்பதாக 2 எம்எல்ஏக்கள் புகார் அளித்துள்ளனர். அதேபோல, தவெக மீது திமுக. அதிமுக கட்சிகளும் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளன. இந்தப் போக்கு ஜனநாயகத்துக்கு தீங்கிழைப்பதாக உள்ளது என்றார்.