விசிக தலைவர் திருமாவளவன்
கடலூர்: எங்களை குறிவைத்தே விமர்சனம் செய்யப்படுவதாகவும் விசிகவில் அதிருப்தியில் உள்ளவர்களை திமுக தங்கள் பக்கம் இழுப்பதாகவும் விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
கடலூரில் நடந்த தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு செயற்குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது: சமூகவலைதளங்களில் சிலர் விசிக குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார்கள்.
தேர்தலில் 17 தொகுதியில் போட்டியிட்டு 4 தொகுதியில் வென்ற பாமக கட்டுக்கோப்போடு இருக்கிறதாம். ஆனால், 8 தொகுதியில் போட்டியிட்டு 2-ல் வெற்றிபெற்ற விசிக வலிமை இழந்துவிட்டதாக விமர்சிக்கின்றனர்.
அதுபோல திமுக, அதிமுக, பாஜக, நாம்தமிழர் கட்சிகளின் இடங்களும், ஓட்டு சதவீதமும் குறைந்ததை யாரும் சரிவு எனப்பேசவில்லை. ஆனால் எவ்வித பொருளாதார பின்புலமும் இல்லாமல் 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற விசிகவை விமர்சிப்பதையே சிலர் நோக்கமாக கொண்டுள்ளனர்.
காழ்ப்புணர்ச்சியோடு சிலர் சமூக ஊடங்களில் கத்துகிறார்கள். விசிகவை குறிவைத்தே திமுக விமர்சனத்தை தீவிரப் படுத்துகிறது. அதிருப்தியில் உள்ளவர்களை தூக்க முயற்சிக்கிறது.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நாளை முதல்வர் விஜய் தலைமையில் விசிக உள்ளிட்ட தோழமைக் கட்சிநாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது. தற்போதைய சூழலில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான மறுவரையறை குறித்த சட்டம் தேவையில்லை என வலியுறுத்துவதற்காக நடக்கும் கூட்டத்தில் விசிக பங்கேற்கிறது.
அடுத்தடுத்து வரக்கூடிய பட்ஜெட்டில் பல அறிவிப்புகள், பல திட்டங்கள் வரும். ஆகவே இந்தபட்ஜெட் குறித்து விசிக வேறு கருத்து ஏதும் சொல்ல விரும்பவில்லை. பழைய திட்டங்களின் பெயர் மாற்றம் செய்வது வழக்கமான ஒன்றுதான். அதை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால் அதை தவிர்க்க முடியாது.
காவிரி குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். திமுகவுக்கு அழைப்பு விடுத்திருந்தால் அதில் அவர்கள் பங்கேற்பது அவசியமானது. இவ்வாறு தெரிவித்தார்.