விசிக தலைவர் திருமாவளவன்

 
தமிழகம்

“உள்நோக்கத்துடன் மாணவர் பாரதிதாசன் வஞ்சிக்கப்படுவதாக தெரியவில்லை” - திருமாவளவன்

செய்திப்பிரிவு

சென்னை: “மாணவர் பாரதிதாசனை தனிப்பட்ட முறையில் வஞ்சிப்பதற்கு எந்த உள்நோக்கமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை” என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “மாணவர் பாரதிதாசன் தொடர்பாக ஏற்கெனவே துறையின் செயலாளர், ஆதிதிராவிட நலத்துறை இயக்குனர் ஆகியோரிடம் பேசியிருக்கிறோம். இந்த ஆண்டு அயல்நாட்டில் கல்வி பயிலும் 360 மாணவர்களுக்கு உதவித்தொகை அளிக்கிறோம். ரூ.131 கோடி இந்த ஆண்டு அதற்கென தமிழக அரசு செலவிடுகிறது என்பதை விளக்கினர்.

இரண்டாம் ஆண்டுக்கான உதவித்தொகையில் பல்கலைக்கழகத்துக்கான கல்வி கட்டணம் அவருடைய வாழ்க்கைச் செலவு ஆகியவற்றுக்கு ரூ.12 லட்சம் இதுவரையில் அளிக்கப்பட்டிருக்கிறது. எஞ்சிய தொகையை விரைவில் அனுப்புவோம் என்று கூறியிருக்கிறார்கள். விரைவில் அனுப்புவார்கள் என்று நம்புகிறேன்.

கடந்த திமுக ஆட்சியில் முதலாம் ஆண்டுக்கான தொகை கொடுக்கப்பட்டது. இப்போது இரண்டாம் ஆண்டுக்கான தொகையில் ரூ.12 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.24 லட்சம் தொடர்பாக பல்கலைக்கழகம் வாயிலாக சில விவரங்கள் கேட்டு இ-மெயில் வாயிலாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக துறையின் இயக்குநர், என்னிடம் கூறினார்.

அனைத்து மாணவர்களுக்கும் என்ன நடைமுறை பின்பற்றுகிறார்களோ அதை தான் பின்பற்ற வேண்டும் என்றும் மற்ற மாணவர்கள் எப்படி உரிய விளக்கத்தை அல்லது விவரத்தை ஆவணங்களோடு தந்து அந்த தொகையை பெற்றுக் கொள்கிறார்களோ அதேபோல் இவரும் பெற வேண்டும் என்று தான் கூறினர். அவரை தனிப்பட்ட முறையில் வஞ்சிப்பதற்கு எந்த உள்நோக்கமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

உள்நோக்கம் காரணமாக மாணவருக்கு உதவி கிடைக்கவில்லை என கூறுவோர் அந்த உள்நோக்கம் என்ன என்பதை வெளிப்படையாக சொல்லட்டும். கடந்த ஆட்சியின்போதே தனக்கு உதவிகள் கிடைக்கவில்லை என கூறியிருக்கிறார். அப்போது திமுகவினர் தலையிட்டு தீர்வுகண்டது போல, நாங்கள் இப்போது தலையிடுகிறோம்.

பொது மக்களுடைய கருத்தை அறிந்து அவர்களின் இசைவோடு தான் எந்த பணிகளையும் செய்ய முடியும். அதுதான் சட்டம். ஆகவே புதிய தலைமை செயலகம் மக்களுடைய உணர்வுகளுக்கு மாறாக எதிராக கட்டி விட முடியாது. தமிழக அரசு அவற்றை எல்லாம் பரிசீலிக்கும் என்று நம்புகிறேன்” என்று திருமாவளவன் கூறினார்.

SCROLL FOR NEXT