சென்னை: காசி தமிழ்ச் சங்கமம் 5.0 திட்டத்தின் கீழ் நடத்தப்படும் திருக்குறள் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்க யுஜிசி அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்துக்கும், காசிக்கும் இடையேயான நீண்டகால நாகரீக பிணைப்புகளை கொண்டாடும் வகையில், மத்திய கல்வி அமைச்சகம் சார்பில், காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி2022 முதல் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு காசி தமிழ்ச் சங்கமம் 5.0 நிகழ்ச்சி நவ.28 முதல் டிச.12 வரை நடைபெறவுள்ளது. இந்தஆண்டு ‘திருக்குறள் கற்போம்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு திருக்குறளின் ஆழமான கருத்துகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மாணவர்களுக்கு திருக்குறள் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில் வெற்றி பெறும் 1,000 மாணவர்கள் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்குஅழைத்துச் செல்லப்பட உள்ளனர்.இந்த போட்டியில் மாணவர்கள் பங்கேற்க பல்கலைக்கழகங்கள் ஊக்குவிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை www.kts.cict.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.