சென்னை: இறைவன் முன்பாக அனைத்து உயிர்களும் சமமானதே என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழிபாட்டுத் தலங்களில் யாருக்கும் எந்த பாகுபாடும் காட்ட இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் தேவராஜ சுவாமிகள் தேவஸ்தானம், வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள மணவாள மாமுனிகள் சன்னதியில் பிராமணர் அல்லாத தென்கலை வைணவ பக்தர்களிடம் சுவாமி தரிசனம் மற்றும் தீர்த்தம், பிரசாதம் வழங்குவதில் சாதிய ரீதியில் பாகுபாடு மற்றும் பாரபட்சம் பார்க்கப்படுவதாகக்கூறி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த திருக்கச்சி நம்பி திருமாலடியார் சேவா சங்கத்தின் செயலாளரான மாதவன் ராமானுஜ தாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், ‘பிராமணர்கள் மட்டும் வரதராஜப்பெருமாள் கோயிலில் உள்ள மணவாள மாமுனிகள் சன்னதியில் சுவாமி தரிசனம் மேற்கொள்ள பிரதான வாயில் வழியாக அனுமதிக்கப்படும் நிலையில், பிராமணர் அல்லாதோர் பக்கவாட்டு வாயில் வழியாகவே அனுமதிக்கப்படுகின்றனர். இதுதொடர்பாக கோயில் நிர்வாகத்திடம் பலமுறை சுட்டிக்காட்டியும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை’ எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், இ.மனோகரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ். சண்முகசுந்தரமும், கோயில் நிர்வாகம் தரப்பில் அரசு வழக்கறிஞர் ஆர். பரணிதரனும், பிற எதிர்மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஹேமா சம்பத்தும் ஆஜராகி வாதிட்டனர்.
அப்போது கோயில் நிர்வாகம் தரப்பில், ‘வரதராஜப்பெருமாள் கோயிலில் ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியார்கள் சன்னதிகள் உள்ள இடம் மிகக்குறுகலானது. சேவா கால நேரங்களில் பணியில் இருக்கும் முறைதாரர்கள் கூட சன்னதிக்குள் முழுமையாக நிற்க முடியாத சூழலில், பொதுபக்தர்கள் சன்னதிக்கு வெளியே நிறுத்தி வைக்கப்படுகின்றனர். இதில் வேறு எவ்வித சாதிய பாகுபாடும் பார்க்கப்படுவதில்லை. மேலும் குறிப்பிட்ட காலங்களை தவிர மற்ற நேரங்களில் பொது பக்தர்கள் சன்னதியில் திவ்ய பிரபந்தம் பாடி இறைவனை வழிபட எந்த தடையும் இல்லை . கோயில் தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்குவதிலும் அனைத்து பக்தர்களும் சமமாகவே பாவிக்கப்படுகின்றனர். இனிவரும் நாட்களிலும் யாருக்கும் எவ்விதப் பாகுபாடும் காட்டப்படாது’ என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், ‘‘இறைவன் முன்பாக அனைத்து உயிர்களும் சமமானதே. இறைவன் யாரிடமும் எந்த பாகுபாடும் காட்டுவதில்லை. ‘கடவுளின் பார்வையில் அனைவரும் சமம்’ என்ற பகவத் கீதையின் வாசகத்தை சுட்டிக்காட்டுகிறோம். வழிபாட்டு தலங்களில் இறைவன் முன்பாக யாருக்கும் எந்த பாகுபாடும் காட்ட இடமில்லை.
எனவே, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம், தீர்த்தம், சடாரி, பிரசாதம் வழங்குவதிலும், திவ்ய பிரபந்தங்களைப் பாடுவதிலும் சாதிய அடிப்படையில் பக்தர்களிடம் எவ்வித பாகுபாடும் காட்டக்கூடாது. இதுதொடர்பாக கோயில் நிர்வாகம் அளித்துள்ள உத்தரவாதத்தை உறுதியாக பின்பற்ற வேண்டும்’’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.