தமிழகம்

“நயினார் நாகேந்திரன் உடன் பனிப்போர் எதுவும் இல்லை” - அண்ணாமலை

இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: “நயினார் நாகேந்திரனுக்கும், எனக்கும் எந்த பனிப்போரும் இல்லை” என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

பல்லடத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “உலக நாடுகளிடம் எங்கு போட்டி இருக்கிறதோ அங்கு எரிபொருள் வாங்கப்படும் என்று நாட்டின் வெளியுறவுத் துறை செயலர் சொல்லியிருக்கிறார். இதுதான் மத்திய அரசின் பதில். ரஷ்யாவில் இருந்து வாங்குகிறோமோ அல்லது வெனிசுலாவில் இருந்து வாங்குகிறோம் என்று சொல்லவில்லை.

          

தமிழகத்துக்கு மத்திய அரசு கொடுக்கப்பட்டுள்ளதை பட்ஜெட்டில் பலரும் பட்டியலிட்டுள்ளனர். அதிவேக ரயில்கள், மருந்து, ஜவுளிப் பூங்கா உள்ளிட்டவை தமிழ்நாட்டுக்கும் பொருந்தும். தமிழ்நாடு அரசு பட்ஜெட்போடும்போது, தனித்தனியாக மாவட்டங்களுக்கு போடுவதில்லை. ஒட்டுமொத்தமாகவே போடுகிறார்கள்.

இந்தியாவில் அதிகப்படியான மருத்துவக் கல்லூரி இருக்கும் மாநிலம் தமிழ்நாடுதான். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடர்ந்து வருகிறது. ஆனால் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கட்டிட பணிகளை ஆய்வு செய்யலாமே? அவர் 5 ஆண்டுகளில் எத்தனை முறை மதுரைக்கு சென்றார்? எய்ம்ஸ் பக்கம் அவர் ஏன் போகவில்லை. எய்ம்ஸ் வரவில்லை என்று சொல்வது எளிது. ஆனால், மாநில அரசின் ஒத்துழைப்பின்றி கட்டுவது பெரும் சவால்தான்.

தேசிய ஜனநாயக கூட்டணி மேலும் வலுப்பெறும் வகையில் கூட்டணியில் சில கட்சிகள் சேரும். சிறுபான்மையினருக்கு கொடுக்கப்படும் ஊக்கத் தொகை பாஜக அரசு அதிகரித்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் பொத்தாம் பொதுவாக அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைக்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் சிறுபான்மையினருக்கும், பெரும்பான்மையினருக்கு திமுக அரசு என்ன செய்துள்ளது?

கேசவ விநாயகம் நல்ல மனிதர். ஆர்.எஸ்.எஸ் சங்கம் அவருக்கு வேறு பொறுப்பு வழங்கியுள்ளது. அவரது பணி சிறப்பாக முடிந்ததற்கு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துவிட்டு வந்தேன். நயினார் நாகேந்திரனுக்கும், எனக்கும் எந்த பனிப்போரும் இல்லை. கட்சி கொடுக்கும் வேலைகளை செய்து கொண்டிருக்கிறேன்” என்றார். தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் வருவாரா என்ற கேள்விக்கு, ‘டீயும் காபியும் ஒன்றாக கலந்து குடிக்க முடியாது” என்றார்.

SCROLL FOR NEXT