தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் வரும் ஜன.24 வரை நடைபெறும் என பேரவைத்தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.
சட்டப்பேரவைக்கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், கூட்டம் முடிந்ததும், ஆளுநர் உரை மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பாக முடிவெடுக்க, அலுவல் ஆய்வுக்குழு கூடியது.
அதன்பின் பேரவைத்தலைவர் மு.அப்பாவு செய்தியாளர்களிடம் கூறியதாவது: தினசரி காலை 9.30 மணிக்கு பேரவை கூடும். 21-ந் தேதி (இன்று),முன்னாள் எம்எல்ஏக்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும்.
பிரபல தொழிலதிபர் அருணாசலம் வெள்ளையன், கவிஞர் ஈரோடு தமிழன்பன், தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன், மக்களவை முன்னாள் தலைவர் சிவராஜ் பாட்டீல், எம்.எல்.ஏ. பொன்னுசாமி ஆகியோரின் மறைவு குறித்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுவதுடன் பேரவை நிகழ்ச்சிகள் நிறைவு பெறும்.
தொடர்ந்து நாளை 22-ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கும். 23-ந் தேதி 2022-23-ம் ஆண்டு மிகைச் செலவுக்கான மானியக் கோரிக்கை, அவைக்கு அளிக்கப்படும். அதற்கான நிதி ஒதுக்க சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டு, விவாதமின்றி நிறைவேற்றப்படும்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் தொடர்ந்து நடைபெறும். இறுதிநாளான ஜன.24-ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளிப்பார். இதுதவிர, பேரவையில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள் நிறைவேற்றப்படும்.
ஆளுநர் அவையில் பேசும்போது மைக் அணைக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். அதில் தவறு நடைபெறவில்லை. ஆளுநர் அரசு தயாரித்து அளித்த உரையை மட்டுமே வாசித்திருக்க வேண்டும். உரைக்கான ஒப்புதலை அவரிடம் ஏற்கெனவே பெறப்பட்ட நிலையில், அவை மரபுக்கு எதிராக பேசப்படும் வார்த்தைகள் அவைக்குறிப்பில் இருக்காது.
ஆளுநர் அரசைப் பற்றி பேசுவது எப்படி? அவர் அரசியல்வாதியல்ல. அவரது பணியைத் தாண்டி பேசுவதை அனுமதிக்க முடியாது. அப்படிப்பட்ட பேச்சு வந்ததால் நான் எழுந்து, மைக் எடுத்து பேசினேன்.நான் பேசுவதை மற்றவர்கள் கேட்கும் வகையில் மற்ற மைக் நிறுத்தப்படும். அந்த வகையில் ஆளுநர் மைக் அணைக்கப்பட்டு இருக்கலாம்.
அதேபோல் அவர் பேசும்போது எனக்கான மைக் அணைக்கப்படும். நான் பேசும்போது, உங்கள் கடமையை மட்டும் செய்யுங்கள் என்றுதான் கூறினேன். அநாகரிகமாக நான் பேசவில்லை. நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையை இப்படி மாற்றி பேச முடியுமா? துணை ஜனாதிபதியாக இருந்த தன்கரின் நிலை என்ன ஆனது? அவர் என்ன குற்றம் செய்தார்?
சட்டப்பேரவையில் தேசிய கீதம் தொடர்பான மரபு ஒருபோதும் மாற்றப்படாது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவாக தேசிய கீதமும் பாடப்படும். இந்த மரபுதான் தொடரும். யாருக்கும் அரசு பயப்படாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.