தமிழகம்

தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி. காரை பொது மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

என்.கணேஷ்ராஜ்

சின்னமனூர்: குச்சனூரில் எம்.பி. தங்க தமிழ்ச்செல்வனின் காரை பொது மக்கள் முற்றுகையிட்டனர். இதனால் ஆவேசமடைந்தவர், போலீஸாரை விலக்கியபடி சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம், குச்சனூர் பேரூராட்சியில் எரிவாயு தகன மேடை அமைப்பதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது. அருகில் குடியிருப்புகள் அதிகம் உள்ளதால் மின் மயானம் இங்கு அமைக்க வேண்டாம். மேலும் குச்சனூருக்கு இந்திய அளவில் இருந்து பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த மயானம் அமைத்தால் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து அதிக உடல்கள் கொண்டு வரப்பட்டு எரியூட்டப்படும்.

இதனால், பிரசித்தி பெற்ற ஸ்தலத்தின் புனிதம் பாதிக்கப்படும் என்று பொதுமக்களில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயிலில் ரூ.2.82 கோடி மதிப்பீட்டில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டும் விழா இன்று (ஜன.3) நடைபெற்றது. எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் தலைமை வகிக்க, கோட்டாட்சியர் செய்யதுமுகமது முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சி முடிந்து காரில் அவர் கிளம்ப முயன்றபோது இப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர். மின் மயானம் இப்பகுதியில் அமைக்க வேண்டாம். எங்களுக்குத் தேவையில்லை என்று தொடர்ந்து கோஷமிட்டனர். இதனால் கோபமடைந்த எம்.பி., தனது காரில் இருந்து இறங்கினார். பின்பு கோஷமிட்டவர்களை நோக்கி ஆவேசமாகச் செல்ல முயன்றார்.

பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் அவரை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் அவர் அவர்களை விலக்கியபடி பொது மக்களை நோக்கி சென்றார். இதனால் இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து பொது மக்கள் கூச்சலிட்டதால் தங்க தமிழ்ச்செல்வன் கோபத்தில் ஒருமையில் திட்டத் தொடங்கினார். பின்பு பொதுமக்கள் விருப்பத்தின் அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.

தொடர்ந்து காரில் ஏறி தங்க தமிழ்ச்செல்வன் கிளம்பிச் சென்றார். பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்ற இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT