

வெனிசுலா அதிபர் மதுரோ, அவரது மனைவி
வாஷிங்டன்: வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெனிசுலா மீது அமெரிக்கப் படைகள் இன்று மிகப் பெரிய தாக்குதல் நடத்தியதை உறுதிப்படுத்திய பின்னர் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதுகுறித்து சமூக ஊடகத்தில் ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், “வெனிசுலா மற்றும் அதன் தலைவர் அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக ஒரு பெரிய அளவிலான தாக்குதலை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. அமெரிக்க சட்ட அமலாக்கத் துறையுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில் மதுரோவும், அவரின் மனைவியும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர்’ என அறிவித்தார்.
மதுரோ கைது செய்யப்பட்டதாக ட்ரம்ப் அறிவித்த நிலையில், “வெனிசுலா மீது அமெரிக்கா ஒரு மிகப் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியதால், அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் இருப்பிடம் குறித்து தகவல் தெரியவில்லை” என்று வெனிசுலா துணை அதிபர் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை அதிகாலையில் நடந்த தொடர் தாக்குதல்களில் குடியிருப்புப் பகுதிகளை அமெரிக்கா தாக்கியதாக வெனிசுலா குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த வெனிசுலாவின் பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பட்ரினோ லோபஸ், "அமெரிக்கப் படைகள் எங்கள் மண்ணை அவமதித்துள்ளன.
போர் ஹெலிகாப்டர்களிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி, வெனிசுலாவில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்குச் சென்றுள்ளன. எங்கள் பாதுகாப்புக்காக அனைத்து தரை, வான், கடற்படை மற்றும் ஏவுகணைத் திறன்களை பயன்படுத்துவோம்” என்றார்.
மதுரோவைக் கைது செய்ததாக ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து, "வெனிசுலாவுக்கு ஒரு புதிய விடியல். கொடுங்கோலன் போய்விட்டார். இப்போது அவர் இறுதியாக தனது குற்றங்களுக்காக நீதியை எதிர்கொள்வார்" என்று அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச் செயலாளர் கிறிஸ்டோபர் லாண்டாவ் தெரிவித்தார்.
முன்னதாக, இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் வெனிசுலாவின் தலைநகர் கராகஸில் ஏழு குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டன. மேலும் தாழ்வாகப் பறந்தபடி விமானங்கள் நகரைச் சுற்றி வந்தன. இதனையடுத்து அமெரிக்கா பொதுமக்களின் வசிப்பிடங்கள் மற்றும் ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக மடுரோ அரசாங்கம் குற்றம் சாட்டியது.
கொலம்பியாவில் அலர்ட்: அமெரிக்கத் தாக்குதல்களைத் தொடர்ந்து வெனிசுலா எல்லையில் தங்கள் நாட்டு படைகள் நிறுத்தப்பட்டதாக கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ தெரிவித்தார்.
இதுபற்றி கருத்து தெரிவித்த பெட்ரோ, “இப்போது வெனிசுலா எல்லையில் ராணுவப் படைகளை நிறுத்த உத்தரவிட்டுள்ளேன். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை லத்தீன் அமெரிக்காவின் இறையாண்மை மீதான தாக்குதல். இவை ஒரு மனிதாபிமான நெருக்கடியில் முடிவடையும்” என்று கூறினார்.
பின்புலம் என்ன? - அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை பதவி விலகுமாறு பலமுறை எச்சரித்து வந்தார். அமெரிக்காவுக்குள் ஃபெண்டானில் போதைப் பொருள் ஊடுருவ வெனிசுலா அதிபரே காரணம் என்று குற்றஞ்சாட்டி வந்தார். அமெரிக்கா மீது வெனிசுலா ‘போதைப் பொருள் பயங்கரவாதம்’ நிகழ்த்துவதாகக் குற்றஞ்சாட்டினார். மேலும், வெனிசுலாவுக்கு பொருளாதாரத் தடைகள் விதித்ததோடு, அதன் கடற்பரப்புக்குள் எண்ணெய்க் கப்பல்கள் போக்குவரத்தையும் முடக்கிவைத்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே கரீபியன் கடற்பகுதியில் அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் ரோந்து, கண்காணிப்பில் தீவிரமாக ஈடுபடுவதோடு, சில போர்க் கப்பல்களும் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இதனிடையே, அமெரிக்கா முன்வைக்கும் போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக விரிவான ஆலோசனைக்கு தயாராக இருப்பதாகவும், அதன் அடிப்படையில் ஒப்பந்தத்தை எட்ட விரும்புவதாகவும் கூட வெனிசுலா அரசு பகிரங்கமாக அறிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.