சென்னை: “பரந்தூர் விமானம் நிலையத்துக்கு மொத்தம் 5,740 ஏக்கர் நிலம் திட்டத்துக்குத் தேவை என்று கூறப்பட்ட நிலையில், சுமார் 1,700 ஏக்கர் நிலம் என்பது 90 சதவீதம் ஆகாது. எனவே, நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான தகவல்கள் உண்மைக்கு மாறானவை” என்று பரந்தூர் விவசாயிகள் போராட்டக் குழு தெரிவித்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில், பரந்தூர் விவசாயிகள் போராட்டக் குழுத் தலைவர் சுப்ரமணியன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை மாநில அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வந்தோம்.
இந்தப் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கான புவியியல் அமைப்பும், சாத்தியக்கூறுகளும் இல்லை என்பதை பல்வேறு ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் அரசிடம் தொடர்ந்து எடுத்துரைத்தோம். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும். நஞ்சை, புஞ்சை உள்ளிட்ட விவசாய நிலங்கள் அழியும் அபாயமும் ஏற்பட்டது.
மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க சுமார் 1,100 ஆண்டுகள் பழமையான கம்பன் கால்வாய், செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து உள்ளிட்ட நீர்நிலைகள் பாதிக்கப்படும் என்றும், சென்னை மாநகரின் மேற்குப் பகுதிகளில் இருந்து வரும் வெள்ளநீரால் எதிர்காலத்தில் சென்னை பெருநகரமே வெள்ளப் பாதிப்பை எதிர்கொள்ளும் சூழல் உருவாகும் என்றும் அரசிடம் எடுத்துக் கூறினோம்.
தற்போது, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்து வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழக முதல்வருக்கு எங்களது மனமார்ந்த நன்றி.
இந்த நீண்டகாலப் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் இந்த முடிவு அமைந்துள்ளது. எங்களது போராட்டத்துக்குஆதரவாக, எங்கள் கிராமத்தில் உள்ள பிரதான சாலைக்கு ஜோசப் விஜய் பெயரைச் சூட்டுவதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பரந்தூர் திட்டத்துக்காக 90 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விட்டதாகவும், திட்டம் ரத்து செய்யப்பட்டதால் தமிழகத்தின் பொருளாதாரம் பாதாளத்திற்குச் சென்றுவிடும் என்றும் முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறியிருந்தார். அந்தத் தகவல் முற்றிலும் தவறானது. மொத்தம் 5,740 ஏக்கர் நிலம் திட்டத்துக்குத் தேவை என்று கூறப்பட்ட நிலையில், சுமார் 1,700 ஏக்கர் நிலம் என்பது 90 சதவீதம் ஆகாது. எனவே, நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான தகவல்கள் உண்மைக்கு மாறானவை.
விவசாய நிலங்களையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிக்காத வகையில் சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பதற்கு பொருத்தமான மாற்று இடத்தை தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும்” என்று அவர் கூறினார்.