மதுரை: புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாடு ‘2026-புதிய தமிழகம் வெல்லும்’ எனும் தலைப்பில் மதுரையில் நேற்று நடைபெற்றது.
கட்சியின் நிறுவனத் தலைவர் க.கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், தேவேந்திர குல வேளாளர் அரசாணை பெற்றுத் தந்த நாயகருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
தேவேந்திர குல வேளாளர்கள் என்ற புதிய பட்டியலை உருவாக்கி, அம்மக்களின் தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். கூட்டணி பலம் என்ற போர்வையில் கட்டமைக்கப்பட்டுள்ள, போலியான சமூகநீதி திராவிட மாடல் ஆட்சியை அகற்ற, தமிழக மக்களும், அந்த எண்ணத்துடன் உள்ள பிற அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்.
குறைந்தபட்ச திட்ட அம்சங்களோடு, அமைச்சரவையில் பங்கு வழங்கும் கூட்டணி ஆட்சி மலர வேண்டும். இதற்காக அனைத்து மக்களும், அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். இதுவே 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் கொள்கை நிலைப்பாடு. ஆணவப் படுகொலைகளுக்கு திராவிடக் கொள்கைவாதிகளே பொறுப்பேற்க வேண்டும். காசுக்கு வாக்களிக்கும் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்.
உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவுப்படி, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் உள்ளிட்ட 36 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.