சென்னை: ‘தாயுமானவர்’ திட்டத்தை 60 வயதினரும் பயன்பெறும் வகையில் விரிவாக்கம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தவெக அரசின் 2026-27-ம் நிதி ஆண்டுக்கான முதல் பட்ஜெட் இந்த மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதில் இடம்பெற வேண்டிய புதிய திட்டங்கள், தற்போதைய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்வர் விஜய் தலைமையில் துறைகள் ரீதியான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
முதல் நாளில் கூட்டுறவு, உணவுத் துறை, வருவாய், பேரிடர் மேலாண்மை துறைகள் சார்ந்த ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில், 2-வது நாளான நேற்று ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன், தலைமைச் செயலர் எம்.சாய்குமார் மற்றும் துறைச் செயலர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
ஓராண்டு, மூன்றாண்டு மற்றும் ஐந்தாண்டு திட்டங்கள், துறைகளின் செயல்பாடுகள் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. துறை வாரியான ஆலோசனைக் கூட்டங்கள் ஜூலை 22-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளன.
இந்நிலையில், ‘தாயுமானவர்’ திட்டத்தை 60 வயது வரை விரிவாக்கம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது. இதுகுறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: முதியோர், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் ‘தாயுமானவர்’ திட்டம் கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.
புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசும் இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. தற்போது 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் என சுமார் 20 லட்சம் பேருக்கு இத்திட்டத்தின்கீழ் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், முதல்வர் விஜய் அறிவுறுத்தலின்படி, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், கைம்பெண்களும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
முதல்வர் தலைமையில் கடந்த 2-ம் தேதி நடைபெற்ற பட்ஜெட் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.