தமிழகம்

“அதிக கடன் வாங்குவது தவெக அரசுதான்” - பட்ஜெட்டை முன்வைத்து தங்கம் தென்னரசு விவரிப்பு

வேட்டையன்

சென்னை: “நாங்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்து விலகியபோது நிகரக் கடன் ரூ.1 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், தற்போது அதைவிட ரூ.22,000 கோடி அதிகமாகக் கடன் வாங்குவதாக அவர்களே இந்த நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளனர்” என்றார் திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு.

2026-27-ம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியது:

“மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த பட்ஜெட், மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. குறிப்பாக, தவெக அரசு தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்திருந்த பல முக்கிய வாக்குறுதிகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்துள்ளனர்.

இந்த நிதிநிலை அறிக்கையின் ஒட்டுமொத்த சாராம்சம் குறித்தும், மக்களின் எதிர்பார்ப்புகளை எவ்வாறு இந்த அறிக்கை பூர்த்தி செய்யத் தவறியுள்ளது என்பது குறித்தும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்து விரிவாக விளக்கியுள்ளார்.

நான் இந்த செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட விரும்புவது, நிதியமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் இடம்பெற்ற கருத்துகளையே ஆகும். வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் நான்கு முக்கிய அம்சங்களை எடுத்துரைத்திருந்தார். அந்த நான்கு அம்சங்களுக்கும் நான் அன்றே விளக்கம் அளித்திருந்தேன். இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டைப் பார்க்கும்போது, அன்றைய தினம் நாங்கள் தெரிவித்த கருத்துகளே உண்மையாகியுள்ளன என்பதை தெளிவாகக் காண முடிகிறது.

தமிழகம் இதற்கு முன் இல்லாத அளவுக்கு கடன் சுமையைச் சந்தித்து வருகிறது. தற்போது மாநிலத்தின் மொத்தக் கடன் ரூ.10 லட்சம் கோடியை எட்டியுள்ளது. ரூ.5 லட்சம் கோடி கடன், வெறும் ஐந்து ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால், இந்தக் கடன் சுமைக்கு முழுக் காரணமும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் என்ற மாயத் தோற்றத்தை நிதியமைச்சர் திட்டமிட்டு உருவாக்க முயன்றார்.

அப்போது நான் தெளிவாகக் கூறியது என்னவென்றால், மாநில அரசுகள் கடன் வாங்குவது ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள வரம்புகளுக்கும், நிதிக்குழு (Finance Commission) வகுத்துள்ள விதிமுறைகளுக்கும் உட்பட்டே நடைபெறுகிறது. மேலும், ஆண்டுதோறும் கடன் அதிகரிக்கும் இயல்பான சூழ்நிலை உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், தற்போது ரூ.10 லட்சம் கோடியாக உள்ள கடன், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.20 லட்சம் கோடியை எட்டும் என்பதையும் அன்றே நான் சுட்டிக் காட்டியிருந்தேன்.

இன்று நிதித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் செய்தியாளர்களைச் சந்தித்தபோதும், “கடன் வாங்குவதை முற்றிலும் தவிர்க்க முடியாது; ஒன்றிய அரசின் அனுமதியுடன்தான் மாநில அரசு கடன் வாங்குகிறது; கடன் வாங்கும் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கும்” என்று தெரிவித்தார். இது, நாங்கள் முன்வைத்த கருத்துக்கு அவர்களே அளித்த ஒப்புதலாகும்.

இந்த ஆண்டில் மட்டும் மாநிலத்தின் நிகரக் கடன் (Net Borrowing) ரூ.1,22,000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே நிலை தொடருமானால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தின் கடன் சுமை மேலும் பெருமளவில் அதிகரிக்கும். நாங்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்து விலகியபோது, நிகரக் கடன் ரூ.1 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் தற்போது, அதைவிட ரூ.22,000 கோடி அதிகமாகக் கடன் வாங்குவதாக அவர்களே இந்த நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், வருவாய் பற்றாக்குறை (Revenue Deficit) குறித்து பேசும்போது, நாங்கள் ஆட்சியை விட்டு வெளியேறியபோது அது ரூ.48,699 கோடியாக இருந்தது. ஆனால் தற்போதைய நிதிநிலை அறிக்கையில் அது ரூ.55,775 கோடியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, சுமார் ரூ.7,000 கோடி அளவிற்கு வருவாய் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

மூலதனச் செலவுகள் (Capital Expenditure) தொடர்பாக, நீண்டகால வளர்ச்சித் திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தவில்லை; பெரும்பாலான நிதி வருவாய் செலவுகளுக்கே பயன்படுத்தப்பட்டது என்று அப்போது நிதியமைச்சர் குற்றம்சாட்டினார். மேலும், மூலதனச் செலவுகளுக்கு முந்தைய அரசு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்ற தோற்றத்தையும் உருவாக்க முயன்றார்.

ஆனால், உண்மை என்னவென்றால், எங்கள் ஆட்சியில் மூலதனச் செலவுகளுக்காக ரூ.59,662 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போதைய பட்ஜெட்டில் ரூ.56,985 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, சுமார் ரூ.3,000 கோடி அளவுக்கு மூலதனச் செலவு குறைக்கப்பட்டுள்ளது. இதைத் திருத்திய மதிப்பீட்டுடன் (Revised Estimate) ஒப்பிட்டுப் பார்த்தாலும் இதே நிலைதான் வெளிப்படுகிறது.

அதேபோல், மாநில அரசின் சொந்த வரி வருவாய் (State's Own Tax Revenue - SOTR) பற்றியும் அவர்கள் பெரிதும் பேசினர். ஆட்சிக்கு வந்தவுடன், திறமையான நிர்வாகம், சிறந்த நிதி மேலாண்மை மற்றும் வரி வசூலில் உள்ள கசிவுகளைத் தடுப்பதன் மூலம் மாநிலத்தின் சொந்த வரி வருவாயை கணிசமாக உயர்த்துவோம் என்று அறிவித்தனர்.

ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்களைப் பார்த்தால், மாநிலத்தின் சொந்த வரி வருவாய் அவர்கள் கூறிய அளவிற்கு உயரவில்லை. மாறாக, எதிர்பார்த்ததை விட சுமார் ரூ.3,000 கோடி அளவுக்கு குறைவாகவே உள்ளது. இதன் மூலம் அவர்கள் கூறிய நிதி மேலாண்மை குறித்த வாக்குறுதிகள் நடைமுறையில் வெற்றி பெறவில்லை என்பது தெளிவாகிறது.

அதேபோல், வருவாய் செலவினங்களை (Revenue Expenditure) எடுத்துப் பார்த்தாலும், நாங்கள் ஆட்சியில் இருந்தபோது அது ரூ.3.93 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது அது ரூ.4.05 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

எனவே, வெள்ளை அறிக்கையில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை விமர்சித்து கூறிய அம்சங்களில்கூட தற்போதைய அரசு வெற்றி பெறவில்லை என்பதையே, அவர்களின் முதல் நிதிநிலை அறிக்கையே தெளிவாக நிரூபிக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு தற்போது புதிய பெயர்கள் சூட்டி மீண்டும் அறிவிப்பதே நடைபெறுகிறது. ஆனால், அந்தத் திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்துவதற்கான உரிய நிதி ஒதுக்கீடுகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.

மேலும் கூற வேண்டுமென்றால், தமிழ் வளர்ச்சித் துறைக்கான நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்பதைக் கூட இந்த ஆண்டு அரசு தெளிவாக அறிவிக்கத் தயாராக இல்லை. இதைப் பார்க்கும்போது உண்மையிலேயே வருத்தமாக உள்ளது.

அதேபோல், தொல்லியல் துறைக்கு வெறும் ரூ.1 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி ரூபாயைக் கொண்டு அந்தத் துறையில் என்ன சாதிக்க முடியும்? மாணவர்களைச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லலாம்; அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், தொல்லியல் சின்னங்களின் பாதுகாப்பு (Conservation), அருங்காட்சியகங்களின் (Museums) மேம்பாடு, புதிய அகழாய்வுகள் (Excavations), நடைபெற்று வரும் ஆய்வுகளின் தொடர்ச்சி ஆகியவற்றிற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இந்த நிதிநிலை அறிக்கையில் எந்தத் தெளிவும் இல்லை.

அதேபோல், கொள்ளிடம் பகுதியில் பெரிய தடுப்பணைகள் அமைக்கப்படும் என்றும், டெல்டா மாவட்டங்களின் சுற்றுச்சூழல் சீரமைப்பு மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இறுதியில் அதற்கான சாத்தியக்கூறு ஆய்வுக்காக வெறும் ரூ.10 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு பதிலாக, சாத்தியக்கூறு ஆய்வுகளுக்கே நிதி ஒதுக்கப்பட்டிருப்பது இந்த அரசின் அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது.

தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்ட பல முக்கிய திட்டங்கள் குறித்து இந்த நிதிநிலை அறிக்கையில் எந்தக் குறிப்பும் இல்லை. மகளிர் உரிமைத்தொகை உயர்த்தப்படும் என்ற வாக்குறுதி, ஆண்டுக்கு ஆறு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி, வேலையில்லா பட்டதாரிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட எந்தத் திட்டமும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

அதேபோல், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்கும் பெயர் மாற்றம் செய்து அறிவித்துள்ளனர். பெயரை மட்டும் மாற்றியிருக்கிறார்கள்; ஆனால், புதிய திட்டத்திற்கான போதுமான நிதி ஒதுக்கீடு எதுவும் இல்லை.

எனவே, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு புதிய பெயர்களைச் சூட்டுவதைத் தவிர, புதிய மக்கள் நலத் திட்டங்களோ, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலான அறிவிப்புகளோ இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.

இதனால், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்த பட்ஜெட் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறிய, ஏமாற்றத்தை ஏற்படுத்திய நிதிநிலை அறிக்கையாகவே அமைந்துள்ளது என்பதை தரவுகளின் அடிப்படையில் நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

மேலும், பள்ளிக்கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடும் குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து நிதித்துறையின் செயலாளர், ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாகச் செலவிடப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால், அதற்குப் பல்வேறு நிர்வாக மற்றும் சட்டரீதியான காரணங்கள் இருக்கலாம். குறிப்பாக, ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் ஆசிரியர்கள் நியமனம் செய்யும் பணிகளில் நீதிமன்ற வழக்குகள் காரணமாக தாமதம் ஏற்பட்டிருக்கலாம். இடைக்கால பட்ஜெட் காரணமாக முழு நிதியாண்டுக்குப் பதிலாக குறுகிய காலத்தில் நிதி ஒதுக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டிருக்கலாம்.

பொதுவாக, எந்த ஆட்சியும் பள்ளிக்கல்வித் துறைக்கான நிதியை குறைப்பதில்லை. கல்வி வளர்ச்சிக்கே எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அந்த வகையில், பள்ளிக்கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது உண்மையிலேயே வருத்தமளிக்கும் விஷயமாகும்.

சாதாரண மக்கள், குறிப்பாக மகளிர், மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தார்கள். அந்த நம்பிக்கையில்தான் பலர் இந்த அரசுக்கு ஆதரவாக இருந்திருக்கக்கூடும். ஆனால், இந்த பட்ஜெட் அனைவருக்கும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

மேலும், நாட்டின் பழமையான நாகரிகங்களைப் பற்றி அவர்கள் பேசுகிறார்கள். ஆனால், உலகப் புகழ்பெற்ற கீழடி நாகரிகம், பொருநை நாகரிகம், வைப்பாற்றங்கரை நாகரிகம் போன்ற தமிழரின் தொன்மை நாகரிகங்களைப் பற்றி இந்த நிதிநிலை அறிக்கையில் ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை.

அண்மையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மலையடிப்பட்டி அகழாய்வுத் தளத்தை நேரில் பார்வையிட்டார். அதுபோன்ற அகழாய்வு முயற்சிகளுக்கோ, தமிழர் பண்பாடு மற்றும் நாகரிகத்தை உலகளவில் எடுத்துச் செல்லும் முயற்சிகளுக்கோ இந்த பட்ஜெட்டில் உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.

தமிழகத்தின் வரலாறு, பண்பாடு, மொழி, நாகரிகம் ஆகியவற்றை முன்னிறுத்த வேண்டிய அடிப்படை உணர்வுகூட இந்த நிதிநிலை அறிக்கையில் வெளிப்படவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.

முடிவாகச் சொல்ல வேண்டுமென்றால், 2026-27ம் ஆண்டுக்கான இந்த நிதிநிலை அறிக்கை, தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாத, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய, புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கான தெளிவான நிதி ஒதுக்கீடுகளை வழங்காத ஒரு ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது.

இந்தப் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள புள்ளிவிவரங்களே, வெள்ளை அறிக்கையில் முந்தைய திமுக ஆட்சியை விமர்சித்து தவெக அரசால் கூறப்பட்ட பல கருத்துகள் நடைமுறையில் நிலைக்கவில்லை என்பதை நிரூபிக்கின்றன. எனவே, இந்த அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கை, அவர்களுடைய தேர்தல் வாக்குறுதிகளுக்கும், நிர்வாகக் கூற்றுகளுக்கும் இடையே உள்ள முரண்பாட்டை வெளிப்படுத்தும் ஆவணமாகவே அமைந்துள்ளது என்றார்.

SCROLL FOR NEXT