சென்னை: ‘பயிர்கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு இழைக்கப்படும் பச்சை துரோகம்’ என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தேனைத் தடவி தேர்தல் வாக்குறுதி கொடுக்கும்போது வராத ரிசர்வ் வங்கி விதிமுறைகள், மக்களை ஏமாற்றி ஆட்சிப் பொறுப்பில் உட்கார்ந்து கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நிலை வரும்போது மட்டும் எங்கே இருந்து திடுமெனக் குதித்து வருகின்றது, இது நிர்வாகத் திறமையின்மையா, இல்லை திட்டமிட்ட ஏமாற்று வேலையா? இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் நடைமுறைகளின்படி தான் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் அண்மையில் விளக்கம் சொல்லியிருக்கிறார்.
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் கடந்த ஆண்டு நவ.11 அன்றே வழங்கப்பட்டுள்ளது. அதை முழுமையாகத் தெரிந்து கொண்ட பின்னர்தான் கடந்த ஏப்.16-ம் தேதி தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 5 ஏக்கருக்குள் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்.
5 ஏக்கருக்கு மேல் வைத்துள்ள விவசாயிக ளின் பயிர்க்கடன் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.
ஆகவே, தெளிவாகத் தெரிந்து கொண்டே வாக்குறுதியைத் தந்து, வாக்கு அறுவடை முடிந்ததும் இப்போது ரிசர்வ் வங்கியைக் காரணம் காட்டி மறுப்பது விவசாயிகளை முற்றிலும் ஏமாற்றுவதாகும். இது விவசாயப் பெருங்குடி மக்களுக்கு இழைக்கப்படும் பச்சைத் துரோகமாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.