ஜெயலலிதாவுக்கு வெற்றியையும் தோல்வியையும் மாறி மாறி பரிசளித்த பர்கூர் தொகுதியில் களமிறங்க அதிமுக-வின் ராஜ்யசபா எம்பி-யும் கொள்கை பரப்புச் செயலாளருமான தம்பிதுரை கட்சி தலைமைக்கு கோரிக்கை வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
பர்கூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட, சிந்தகம்பள்ளியைச் சேர்ந்தவர் தம்பிதுரை. ஆங்கிலப் புலமை பெற்ற இவரை எம்ஜிஆர் தனக்குப் பக்கத்திலேயே வைத்திருந்தார். அவரைத் தொடர்ந்து ஜெயலலிதாவும் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாய்ப்பளித்து வந்தார். தற்போது ராஜ்யசபா எம்பி-யாக இருக்கும் தம்பிதுரைக்கு பாஜக தலைவர்களோடும் நல்ல நெருக்கம் இருக்கிறது.
இந்நிலையில், எனது சொந்தத் தொகுதியான பர்கூர் மக்களுக்கு சேவைசெய்ய விரும்புகிறேன். அதனால் இம்முறை பர்கூரில் போட்டியிட எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என தலைமையிடம் விருப்பம் தெரிவித்திருக்கிறாராம் தம்பிதுரை.
பர்கூர் தொகுதியில் இதுவரை அதிமுக 9 முறையும், திமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தற்போது, திமுக-வை சேர்ந்த மதியழகன் எம்எல்ஏ-வாக உள்ளார். தம்பிதுரை இங்கே 2 முறை போட்டியிட்டு வென்று கல்வி அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.
டெல்லி அரசியலில் இருந்து மீண்டும் அவர் மாநில அரசியலுக்கு திரும்பிட விரும்புவது குறித்து பர்கூர் அதிமுக வட்டாரத்திலிருந்து நம்மிடம் பேசியவர்கள், “பர்கூர் தொகுதியில் போட்டியிடும் திட்டத்துடன் கடந்த ஓராண்டாக இங்கு மருத்துவ முகாம்களை நடத்தி வரும் தம்பிதுரை, கிராமங்கள் தோறும் விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதிலும், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் முனைப்பாக செயல்பட்டு வருகிறார்.
பர்கூர் தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சிகளில் வாரத்துக்கு 2 புதிய திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை போட்டும் வருகிறார். ‘மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் கண்டிப்பாக வாணி ஓட்டு பாசன வசதி திட்டம் மூலம், பர்கூர் தொகுதியில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீர் கொண்டு வருவதே எனது வாழ்நாள் லட்சியம்’ என மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தும் வருகிறார்.
ஆனால், அதிமுக தலைமை, தம்பிதுரையை மீண்டும் ராஜ்யசபாவுக்கு அனுப்பி அவரை டெல்லியில் வைத்துக் கொள்ளவே ஆர்வமாக இருப்பதாகத் தெரிகிறது” என்றனர்.
இதனிடையே, கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக-வின் அதிகார மையமாகச் செயல்படும் கே.பி.முனுசாமி கடந்த முறை பர்கூரில் தோற்றுப் போன கிருஷ்ணன் அல்லது திமுக-விலிருந்து தன்னால் அழைத்துவரப்பட்ட இ.சி.கோவிந்தராசனை இம்முறை பர்கூரில் நிறுத்தி தம்பிதுரையை ஓரங்கட்ட நினைப்பதாகச் சொல்கிறார்கள்.