சென்னை: நவம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு மே மாதம் வரையிலான மாலை நேர உச்சபட்ச மின் தேவையைச் சமாளிக்க 1,000 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளியை மின்வாரியம் கோரியுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மாநிலத்தில் நிலவி வரும் மின்சார தேவையை கருத்தில் கொண்டு,
வரும் நவ.1 முதல் அடுத்தாண்டு மே 31 வரையிலான காலகட்டத்துக்கு 1,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. குறிப்பாக, தினமும் மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை ஏற்படும் உச்சபட்ச மின்தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த மின் கொள்முதல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதற்காக, மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் ஆகியவற்றின் அங்கீகாரம் பெற்ற மாநிலங்களுக்கு உள்ளேயான மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான மின் உற்பத்தியாளர்கள், மின் வர்த்தகர்களிடமிருந்து நிலையான அடிப்படையில் ஒப்பந்தப் புள்ளிகள் வரவேற்கப்படுகிறது.
மத்திய மின்சார அமைச்சகம் 2016-ம் ஆண்டு வெளியிட்ட குறுகிய கால மின் கொள்முதலுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் 2022-ம் ஆண்டு வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட விதிகளின்படி இந்த மின்னணு ஏல நடவடிக்கைகள் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் தங்களது ஒப்பந்தப்புள்ளிகளை மத்திய அரசின் ‘DEEP’ மின்னணு ஏலஇணையதளப் பக்கம் வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான விவரங்கள் தமிழக மின்வாரிய இணைய தளத்தில் (www.tangedco.gov.in) அறிந்துகொள்ளலாம்.