கோப்புப்படம்
சென்னை: ஆயிரம் ஏசி மின் பேருந்துகள் கொள்முதலுக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்கும் நோக்கில் மின்சார பேருந்துகளை இயக்கி வருகிறது. தற்போது 310 ஏசி மின்சார பேருந்துகளும், 400 ஏசி வசதி இல்லாத பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த மின்சார பேருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது. ஒப்பந்தப்படி பேருந்துகளை தனியார் நிறுவனம் இயக்கும், அதற்கான தொகையை போக்குவரத்து கழகம் வழங்கும்.
அதன்படி, ஒரு பேருந்து தினமும் 200 கி.மீ. இயக்க வேண்டும், மாநகர போக்குவரத்து கழகம் ஏசி பேருந்துகளுக்கு ஒரு கி.மீ.க்கு ரூ.80.82-ம், ஏசி இல்லாத பேருந்துகளுக்கு ஒரு கி.மீ.க்கு ரூ.77.12-ம் வழங்குகிறது.
இதனிடையே கடந்த மார்ச் மாதம் ஆயிரம் 12 மீட்டர் தாழ்தள மின் பேருந்துகளை கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது. இந்த டெண்டரில் அதிக நிறுவனங்கள் பங்கேற்காததால் பலமுறை டெண்டர் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே நேற்று டெண்டர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெண்டரில் அதிக நிறு வனங்கள் பங்கேற்காததே காரணம் என அதிகாரிகள் கூறினர்.