ஜெம் வீரமணி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எஸ்ஆர்எம்யூ கண்ணையா மகன் பிரகாஷ் முன்ஜாமீன் மனு

போலீஸார் பதிலளிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
ஜெம் வீரமணி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எஸ்ஆர்எம்யூ கண்ணையா மகன் பிரகாஷ் முன்ஜாமீன் மனு
Updated on: 
1 min read

சென்னை: ஜெம் வீரமணி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தெற்கு ரயில்வே எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்கத் தலைவரான கண்ணையா மகன் பிரகாஷ் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனுவுக்கு போலீஸார் பதிலளிக்க போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட் உரிமையாளரான வீரமணி கைதாகி சிறையில் உள்ளார்.

இந்நிலையில் ஜெம் வீரமணிக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை விற்பனை செய்யவும், அதன்மூலமாக கிடைத்த தொகையின் மூலமாக பாலியல் வழக்கை மூடி மறைக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுக்க வீரமணிக்கு உடந்தையாக செயல்பட்டதாகவும், இதற்காக பெரும் தொகையை அன்பளிப்பாக பெற்றதாகவும் தெற்கு ரயில்வே எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்கத்தின் தலைவரான கண்ணையாவின் மகன் பிரகாஷ் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

லுக்-அவுட் நோட்டீஸ்

இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி பிரகாஷூக்கு போலீஸார் சம்மன் அனுப்பிய நிலையில் அவர் வெளிநாட்டிற்கு சென்று இருப்பது தெரியவந்தது. அதையடுத்து அவருக்கு எதிராக போலீஸார் லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

இந்நிலையில் முன்ஜாமீன் கோரி பிரகாஷ் சார்பில் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ். பத்மா முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம், இந்த வழக்கில் மனுதாரருக்கு எந்த விதத்திலும் தொடர்பு இல்லை. வீரமணி வழக்கில் மனுதாரரை தொடர்புபடுத்தி போலீஸார் கூறும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை.

வீரமணிக்கும், மனுதாரருக்கும் தொழில் ரீதியாக மட்டுமே பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது. ஏற்கெனவே போலீஸாரின் விசாரணைக்கு மனுதாரர் நேரில் ஆஜராகி போதிய ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்.

எனவே பிரகாஷூக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும், என வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா, மனுதாரரான பிரகாஷூக்கு முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, இதுதொடர்பாக நாளை (இன்று) பதில்மனு தாக்கல் செய்யப்படும், என்றார். அதையடுத்து நீதிபதி, இந்த மனுவுக்கு போலீஸார் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்துள்ளார்.

ஜெம் வீரமணி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எஸ்ஆர்எம்யூ கண்ணையா மகன் பிரகாஷ் முன்ஜாமீன் மனு
தமிழகத்தில் 203 கோயில்களுக்கு ஆன்மிக நூல்களை விநியோகிக்க அறநிலையத் துறை டெண்டர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in