சென்னை: தரமணி இணைப்புச் சாலை, ஜிஎஸ்டி சாலையை மாதிரி நகர்ப்புற போக்குவரத்து வழித்தடங்களாக மேம்படுத்தும் வகையில் விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க ஆலோசகர் நிறுவனத்தை நியமிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.
சென்னையில் இயங்கி வரும் பாரம்பரிய சாலைக் கட்டமைப்புகளை சர்வதேசத் தரத்துக்கு மேம்படுத்த மாதிரி நகர்ப்புற போக்குவரத்து வழித்தடம் திட்டத்தை சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பு (கும்டா) மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்படி, பாத சாரிகள் பாதுகாப்பாக நடந்து செல்ல அகலமான மற்றும் நவீன வசதிகள் கொண்ட நடைபாதைகள் அமைக்கப்படும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் வகையில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கெனத் தனிப்பாதைகள் உருவாக்கப்படும். பொதுமக்கள் விரைவாகப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களை அணுகும் வகையில் பேருந்து நிறுத்தங்கள் மாற்றியமைக்கப்படும். பொது போக்குவரத்து வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த நவீன போக்குவரத்துச் சிக்னல்கள் நிறுவப்படும்.
ஓஎம்ஆர் சாலையில் மத்திய கைலாஷ் முதல் கேளம்பாக்கம் வரையிலான 25 கி.மீ நீளசாலை மற்றும் பல்லாவரம் ரேடியல் சாலையில் பல்லாவரம் மேம்பாலம் முதல் துரைப்பாக்கம் சந்திப்பு வரை 7.4 கி.மீ சாலையில் முதற்கட்டமாக இந்த திட்டத்தை செயல்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 3 இணைப்புச் சாலைகள் இந்நிலையில் இந்த திட்டத்தில் 2-வது கட்டமாக சென்னையின் மிக முக்கியமான 3 இணைப்புச் சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
தரமணி இணைப்புச் சாலை, ஜிஎஸ்டி சாலை மற்றும் வேளச்சேரி- தாம்பரம் சாலையில் மர்மலாங் பாலம் முதல் வாலாஜா சாலை வரையும் இந்த திட்டத்தை செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க ஆலோசகரை நியமிக்க கும்டா டெண்டர் கோரிஉள்ளது.