தமிழகம்

சாதியை பரப்பும் களமாக திருவிழாக்கள் இருக்கக் கூடாது: உயர் நீதிமன்றம்

கி.மகாராஜன்

மதுரை: கோயில் திருவிழா அழைப்பிதழில் சாதி பெயர்களை சேர்க்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், சாதியை பரப்பும் களமாக திருவிழாக்கள் இருக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை நார்த்தாமலையைச் சேர்ந்த சண்முகம், லட்சுமணன், மாதவன் உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், புதுக்கோட்டை, நார்தமலை, ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா நடைபெற உள்ளது. இவ்விழாவுக்கான அழைப்பிதழை பல ஆண்டுகளாகக் கோயிலில் பின்பற்றப்பட்டு வரும் வழக்கப்படி மண்டகபடிதாரர்களின் பெயருடன் மண்டகப்படியையும் குறிப்பிட்டு அச்சிட உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

          

மனுவை நீதிபதி பரதசக்கரவர்த்தி விசாரித்தார். பின்னர் நீதிபதி, கோயிலில் பின்பற்றப்பட்டு வந்த வழக்கமான நடைமுறையைச் சுட்டிக்காட்டி, அழைப்பிதழில் மனுதாரர்களின் பெயர்களை அவர்களின் ‘பட்டப்பெயர்’ உடன் அச்சிடக் கோருகின்றனர். அந்தப் பட்டப் பெயர்கள் சாதியின் பெயராக உள்ளது. சாதி என்பது இல்லாத ஒன்று. அது மக்களின் மனதில் மட்டுமே உள்ளது. பழமையாக பின்பற்றப்பட்ட அமைப்பு சமத்துவ, அரசியலமைப்பு கோட்பாடுகளுக்கு எதிரானது. திருவிழாக்கள் சாதியைப் பரப்புவதற்கான ஒரு களமாக இருக்கக்கூடாது.

சமத்துவ சமுதாயத்தை மேம்படுத்துவதும், சாதியை ஒழிப்பதும் மட்டுமே திருவிழாக்களின் நோக்கமாகும். அவ்வாறு இருக்கும் நிலையில், சாதிப் பெயரைச் சேர்க்க வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது. வேறு சில நபர்களின் விஷயத்தில், சாதியை ஒட்டியே பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது எனக் மனுதாரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அது வரும் ஆண்டுகளில் தொடரக்கூடாது.

ஒருவரின் பிறப்பின் அடிப்படையில் அவரது ஆடைகளைத் துவைக்கச் சொல்வது, மனித உரிமைகளின் கோட்பாடுகளுக்கு எதிரானது. அதை நேரடியாகவோ, மறைமுகமாகவோ, ஏன் அழைப்பிதழில் கூட அங்கீகரிக்கக் கூடாது.

மனுதாரரின் கோரிக்கைகளை பொறுத்தவரை, அது பொதுக் கொள்கைக்கும், அரசியலமைப்புக்கும் விரோதமானது. எனவே அழைப்பிதழில், மண்டபத்தை நடத்துபவர்கள் அல்லது அதற்கு நிதியுதவி அளிப்பவர்கள், ஊர்காரர்கள் என பொதுவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது அப்படியே இருக்க வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT