கோப்புப் படம்
சென்னை: தமிழகத்தில் இன்றுமுதல் ஏப்.12 வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சத்தீஸ்கர் முதல் மன்னார் வளைகுடா வரை தெலங்கானா, ராயலசீமா, உள் தமிழகம் வழியாக சுமார் 900 மீட்டர் உயரத்தில், ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், 10, 11 தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 12-ம் தேதி தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களிலும், 13, 14 தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இன்றுமுதல் 12-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட்டை ஒட்டி இருக்கக்கூடும்இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.