சென்னை: தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களின் அறைகளிலேயே நேற்று சுமார் ஒரு மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால், பணிகள் தடைபட்டன.
தமிழகத்தில் நகர்ப்புறங்கள், கிராமப்புறங்களில் பரவலாக மின்தடை பிரச்சினை உள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் நீண்ட நேரம் மின்தடை ஏற்படுவதால் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், என். ஆனந்த், வெங்கடரமணன், ரஞ்சித் குமார் உள்ளிட்டோரின் அறைகளில் நேற்று காலை 10.30 மணி அளவில் திடீர் மின்தடை ஏற்பட்டது. இதனால், அமைச்சர் அலுவலகங்களில் பணிகள் தடைபட்டன.
இதுகுறித்து தமிழக மின்வாரியம் வெளியிட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது: தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டிடத்தின் முதல் தளத்தில் சில பகுதிகளில் மட்டும் மின் விநியோகத்தில் தற்காலிகத் தடை ஏற்பட்டது. மற்ற அனைத்து தளங்களிலும் மின் விநியோகம் தடையின்றி இயல்பாக இருந்தது. தலைமைச் செயலக வளாகத்துக்குள் உள்ள மின் விநியோகக் கட்டமைப்புகள் பொதுப்பணித் துறையின் பராமரிப்பில் உள்ளன.
முதல் தளத்துக்கு மின்சாரம் வழங்கும் 4 மின் சுவிட்ச்களில், ஒரு சுவிட்ச்சின் பி-பேஸ் (B-Phase) மின் விநியோகத்தில் மட்டும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து பொதுப்பணித் துறை அலுவலர்கள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, பழுதை சரிசெய்து, மின் விநியோகத்தை மீண்டும் சீரமைத்தனர். தொடர்ந்து காலை 11.25 மணி அளவில் முதல் தளத்தில் இயல்பான மின் விநியோகம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டது. அதன் பின்னர், தலைமைச் செயலகத்தின் அனைத்து தளங்களிலும் மின் விநியோகம் சீராக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.