சென்னை: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைவது, உயர்கல்விக்கு மீண்டும் ஊக்க ஊதிய உயர்வு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு பள்ளிக்கல்வி அமைச்சரிடம் ஆசிரியர் கூட்டமைப்பு நேரில் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (டிட்டோஜாக்) மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனை நேற்று சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு முன்பு வழங்கப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை மீண்டும் வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியின்படி, அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணைக் குறைக்க வேண்டும், பணி அனுபவம் மற்றும் உயர்கல்வி தகுதிக்கேற்ப வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க வேண்டும்.
பாடத்திட்டத்துக்கு அப்பால் கேட்கப்பட்ட வினாக்களுக்கு முழு மதிப்பெண் தர வேண்டும். ஆசிரியர்களைப் பெரிதும் பாதிக்கக்கூடிய அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும்.
அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மாற்றுத் திறனாளிகள், தீவிர நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் 55 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் ராஜ்மோகன், கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் என தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் டி.ஆர். ஜான் வெஸ்லி தெரிவித்தார்.