போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை குண்டு கட்டாகத் தூக்கி அங்கிருந்து வெளியேற்றிய போலீஸார். (அடுத்த படம்) சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி, எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலக வளாகத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள். படங்கள்: ம.பிரபு
சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி, சென்னையில் நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஊதிய முரண்பாட்டை களையக் கோரி இடைநிலை ஆசிரியர்கள், சென்னை டிபிஐ வளாகத்தை நேற்று முன்தினம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தொடர்ந்த சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட் டனர். அதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.
அதன்படி, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின்மாநில தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார், பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் உள்ளிட்ட நிர்வாகி
கள் தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலர் ப.சந்திரமோகன், தொடக்கக் கல்வி இயக்குநர் பி.ஏ.நரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் போராட்டம் தொடரும் என இடைநிலை பதிவுமூப்புஆசிரியர்கள் இயக்கத்தின் மாநிலதுணை பொதுச்செயலாளர் வேல்முருகன் அறிவித்தார். அதைத்தொடர்ந்து, நேற்று காலை 10 மணியளவில் டிபிஐ வளாகம் முன்பாக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். ஆனால், போராட்டக் குழுவினர், எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலக வளாகத்துக்கு போராட்டத்தை மாற்றி நேற்று காலை 10 மணியளவில் அங்கு குவியத் தொடங்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்தும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்துக்கு போலீஸார் விரைந்தனர். ஆனால், அதற்குள் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். நாங்கள் ஊதிய உயர்வு கேட்கவில்லை உரிய ஊதியத்தைதான் கேட்கிறோம் என அவர்கள் கோஷமிட்டனர். போராட்டத்தில் பங்கேற்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்து வந்துகொண்டிருந்த ஆசிரியர்களை அலுவலக வளாகத்துக்குள் நுழையவிடாதபடி போலீஸார் தடுத்தனர். அதைத்தொடர்ந்து, அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருசக்கர வாகனங்கள், அரசு பேருந்துகள் உள்பட அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.
இந்நிலையில், அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராடிய ஆசிரியர்களை போலீஸ் வாகனத்தில் ஏறுமாறு போலீஸ் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், ஆசிரியர்கள் மறுக்கவே, அவர்களை குண்டுகட்டாகத் தூக்கி போலீஸ் வாகனங்களில் ஏற்றி வெளியேகொண்டுசென்றனர். இதற்கிடையே, சில ஆசிரியர்கள் மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆசிரியர் ஒருவரின் உடல்நிலை சற்று மோசமானதால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அவரைக் கொண்டு சென்றனர். காலை 10 மணிக்கு தொடங்கிய ஆசிரியர்களின் போராட்டம் பிற்பகல் 3 மணி வரை நீடித்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைதான நிலையில் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.