

புதுடெல்லி: புதிய ஊரக வேலை உறுதி திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி நாடு முழுவதும் ஜனவரி 5-ம் தேதி முதல் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, மூத்த தலைவர்கள் ஹரிஷ் ராவத், சல்மான் குர்ஷித், அபிஷேக் மனு சிங்வி, ராஜீவ் சுக்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர், கார்கே, ராகுல் இருவரும் கூட்டாக செய்தியாளர் களை சந்தித்தனர். அப்போது, கார்கே கூறியதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (MGNREGA) ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தொலைநோக்கு திட்டம் ஆகும். இது வெறும் திட்டம் அல்ல, கிராமப்புற ஏழைகளுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள வேலை உரிமை. இதற்கு உலகநாடுகள் பாராட்டு தெரிவித்தன.
இந்நிலையில், இந்த திட்டம் குறித்து எவ்வித ஆய்வோ, மதிப்பீடோ செய்யாமல், அரசியல் கட்சிகள், சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனையும் நடத்தாமல் திட்டத்தின் பெயரை ‘விபி-ஜி ராம் ஜி’ என மத்திய அரசு மாற்றியுள்ளது. 3 வேளாண் சட்டங்களை கொண்டுவந்தது போலவே இந்த சட்டத்தையும் மத்திய அரசு தன்னிச்சையாக மாற்றி உள்ளது. குறிப்பாக, மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காந்தி அவமதிக்கப்பட்டுள்ளார். இதை ஏற்க முடியாது. அத்துடன், புதிய திட்டம் ஏழைகளுக்கான வேலை உரிமையைப் பறிக்கும் வகையிலும், மாநில அரசுகளுக்கு நிதிச்சுமையை அதிகரிக்கும் வகையிலும் உள்ளது.
எனவே, எதிர்க்கட்சிகள், விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக 3 வேளாண் சட்டங்களை ஏற்கெனவே ரத்து செய்ததுபோல, இந்த புதிய ஊரக வேலை உறுதி திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நாடு முழுவதும் போராட்டம் நடத்த வேண்டியது அவசியமாகிறது. விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக, வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் என்று ராகுல் காந்தி முன்கூட்டியே கணித்தார். அது போல, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தையும் மீண்டும் மீட்டெடுக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
இதற்காக, 'MGNREGA திட்டத்தைக் காப்போம்' என்ற பெயரில், வரும் ஜனவரி 5-ம் தேதி நாடு தழுவிய இயக்கம் தொடங்குவது என காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, புதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம், பேரணி நடைபெறும். இதில், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்பார்கள். இந்த போராட்டத்தின்போது, புதிய திட்டத்தின் பாதகமான அம்சங்கள் குறித்து மக்களிடம் அவர்கள் எடுத்துரைப்பார்கள்.
எஸ்ஐஆர் திட்டமிட்ட சதி: சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் வாக்குத் திருட்டு எப்படி நடைபெற்றது என்பது குறித்து ராகுல் காந்தி ஏற்கெனவே விளக்கமாக எடுத்துரைத்துள்ளார். இப்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) என்ற பெயரில் மோசடி நடைபெறுகிறது. இந்த விவகாரத்தில் பாஜகவும், தேர்தல் ஆணையமும் இணைந்து இந்த சதித் திட்டத்தை அரங்கேற்றுகின்றன. எனவே, நமது வாக்காளர்களின் பெயர், பட்டியலில் இருந்து நீக்கப்படுவதை தடுக்க வேண்டியது நமது கடமை. குறிப்பாக, தலித், பழங்குடியினர், மிகவும் பின்தங்கிய வகுப்பினர், சிறுபான்மையினர் உள்ளிட்டோரின் பெயர்கள் நீக்கப்படுவதை தடுக்க வேண்டும். அவர்களது பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை, நமது வாக்குச்சாவடி முகவர்கள் வீடு வீடாகச் சென்று உறுதி செய்ய வேண்டும்.
தாக்குதலுக்கு கண்டனம்: வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடைபெறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுபற்றி ஒட்டுமொத்த நாடும் கவலைப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையன்று பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளுடன் தொடர்பு உடையவர்கள் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இது சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாகவும், சர்வதேச அளவில் இந்தியா மீதான நல்லெண்ணத்தை பாதிப்பதாகவும் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
சமீபகாலமாக, பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் பாராட்டும் வகையில் பேசி வரும் காங்கிரஸ் எம்.பி. சசி தரூரும் இக்கூட்டத்தில் பங்கேற்றார்.
கூட்டம் நடைபெற்ற காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வெளியே, கர்நாடக முதல்வராக மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வராவை நியமிக்க வலியுறுத்தி சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமரின் தன்னிச்சையான முடிவு: ராகுல் கடும் விமர்சனம்
செய்தியாளர்களிடம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் உறுதி செய்யப்பட்டது. பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் நேரடி அரசியல் பங்களிப்பு மற்றும் நிதி உதவிக்கான ஒரு கருவியாக இத்திட்டம் இருந்தது. இது சர்வதேச அளவில் பரவலாக பாராட்டுதலைப் பெற்றுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் முற்றிலும் புதிய, உரிமை சார்ந்த வளர்ச்சித் திட்டம் கொண்டு வந்ததை, தான் சென்ற 16 நாடுகளிலும் பாராட்டியதாக கார்கே கூறினார். இந்த சூழ்நிலையில், அமைச்சர்களிடமோ, சம்பந்தப்பட்டவர்களிடமோ முறையாக ஆலோசனை நடத்தாமல் இந்த திட்டத்தை பிரதமர் மோடி தன்னிச்சையாக முடக்கி உள்ளார். இந்த நடவடிக்கையால் அதானிபோன்ற முதலாளிகள்தான் பயனடைவார்கள். இதன் மூலம் மாநிலங்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஒரு தனி மனிதனின் ஆட்சி நடப்பதையே இது காட்டுகிறது.
உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி அளிப்பதற்கும், ஊரக வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்கும் மாநிலங்கள் வரலாற்று ரீதியாக தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் போன்ற திட்டங்களையே சார்ந்துள்ளன. இத்தகைய திட்டங்கள் உள்ளூர் நிர்வாகம் மற்றும் பிராந்திய வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. இந்த சூழலில், மத்திய அரசின் தலையீடு இந்த முயற்சிகளை வலுவிழக்கச் செய்கிறது.
மத்திய அரசின் சமீபத்திய முடிவுகள், மாநில சுயாட்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் விளிம்புநிலை சமூகங்களின் உரிமைகள் மீது நேரடி தாக்குதல் நடத்துகின்றன. மாநிலங்களுக்கு சொந்தமான நிதி ஆதாரம், முடிவு எடுக்கும் அதிகாரத்தை மத்திய அரசு பறித்துக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.