சென்னை: பொங்கல் தினத்தில் ரூ.251 கோடி உட்பட தமிழகம் முழுவதும் 2 நாட்களில் ரூ.518 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படுகின்றன. இதில் 2,919 கடைகளில் மது அருந்தும் பார்கள் உள்ளன. டாஸ்மாக் மதுக்கடைகளை பொறுத்தவரை தினமும் சராசரியாக ரூ.150 கோடி அளவுக்கு மதுவிற்பனை நடைபெறும். சனி, ஞாயிறு உள்ளிட்ட வார இறுதி நாட்களில் ரூ.200 கோடிக்கும், மற்ற பண்டிகை காலங்களில் ரூ.250 கோடிக்கும் மது விற்பனை நடைபெறும்.
அதேபோல டிச.31 மற்றும் ஜன. 1 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் ரூ.400 கோடிக்கு மேல் மது விற்பனை இருப்பது வழக்கம். அதேபோல் தீபாவளி பண்டிகையின் போதும், பொங்கல் பண்டிகையின் போதும் மதுவிற்பனை மிக அதிகமாக இருக்கும். பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கொண்டாடப்படும் நிலையில்இந்தாண்டு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறையாகும்.
கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது ஜன.13, 14, 16 ஆகிய 3 நாட்களில் ரூ.725 கோடிக்கு மது விற்றது. இந்தாண்டு 14, 15 தேதிகளில் டாஸ்மாக் கடைகளில் ரூ.435 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. கடந்த 13-ம் தேதி ரூ.184 கோடிக்கும், பொங்கல் நாளில் மட்டும் ரூ.251 கோடிக்கு விற் றது.
மேலும் சென்னை மண்டலத்தில் ரூ.56 கோடி, திருச்சி-ரூ.49.81 கோடி, மதுரை- ரூ.54 கோடி, சேலம்- ரூ.46 கோடி, கோவை- ரூ.44.80 கோடி அளவுக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது.
திருவள்ளுவர் தினத்தன்று கடைகள் மூடப்படும் என்பதால் பெரும்பாலானோர் பொங்கல் அன்றே மது வாங்கி வைத்தால் விற்பனைசற்று அதிகரித்துள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளை தவிர தனியார் விடுதிகள், மனமகிழ் மன்றங்களில் 2 நாட்களில் ரூ.82.5 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தமாக கடந்த 14,15 ஆகிய நாட்களில் ரூ.517.85 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.