சென்னை: ‘டாஸ்மாக் கடைகளில் இனி நிர்ணயிக்கப்பட்ட விலைக்கே மதுபானங்கள் விற்கப்படும்’ என்று தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் பழனி பாரதி, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினோம்.
அப்போது டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட எம்ஆர்பி விலையைவிட கூடுதலாக ஒரு ரூபாய்கூட வசூலிக்கக்கூடாது என்று அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அதையேற்று, எங்கள் சங்கத்தின்கீழ் செயல்படும் 25 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 3,500 ஊழியர்களும் மதுபானங்களை இனி கூடுதல் விலைக்கு விற்பதில்லை என முடிவு எடுத்துள்ளோம்.
இதற்குமுன், சரக்கு இறக்கும் கூலி, உடையும் பாட்டில்களுக்கான இழப்பு உள்ளிட்ட நிர்வாகச் செலவுகளை ஊழியர்களே சமாளிக்க வேண்டியிருந்தது. கடந்த காலங்களில் இதற்கான தீர்வு கிடைக்காததாலேயே பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலித்து அந்தச் செலவுகளை சரிசெய்து வந்தோம். இதன் விவரங்களை அமைச்சரிடம் தெரிவித்தோம்.
இதையடுத்து, 25 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டதுடன், டிரான்ஸ்போர்ட் ஒப்பந்ததாரர்களிடம் பேசி இறக்கும்கூலி பிரச்சினையையும் அரசு சரிசெய்துள்ளது. செலவினங்களை அரசு ஏற்றதால், கூடுதல் விலை வசூலிப்பதை நாங்கள் நிறுத்திக்கொண்டோம்.
மேலும், பூரண மதுவிலக்கு கொண்டுவரப்பட்டால் நாங்கள் முழு மனதோடு ஆதரிப்போம். அதேநேரம், எங்கள் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு வேறு துறைகளில் மாற்றுப்பணி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.