தமிழகம்

ரூ.10 பிரச்சினைக்கு தீர்வு என்ன? - முதல்வர் விஜய்க்கு டாஸ்மாக் பணியாளர் சங்கம் யோசனை

செய்திப்பிரிவு

சென்னை: கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதைத் தடுக்க, கேரளாவில் உள்ள நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் யோசனை தெரிவித்துள்ளது.

இது குறித்து முதல்வர் விஜய்க்கு டாஸ்மாக் சங்கத்தின் தலைவர் பெரியசாமி எழுதிய கடிதத்தின் விவரம்: வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் இருந்து 500 மீட்டர் தூர எல்லைக்குள் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் இந்த பகுதிகளில் உள்ள எஃப்.எல்-2 மற்றும் மனமகிழ் மன்றங்கள் வழியாக மதுபானங்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. இதனையும் தடுத்தால்தான் அரசின் நோக்கம் நிறைவேறும். இல்லையென்றால், அரசின் நடவடிக்கை அரசு கடைகளை மூடிவிட்டு, தனியார் மதுபான வியாபாரத்தை ஊக்குவிப்பதாக அமையும்.

மதுபானக் கடைகளில் அதிகபட்ச சில்லறை விலைக்கும் கூடுதலாக ரூ.10-ம் அதற்கு மேலும் விற்கப்படும் புகார் தொடர்பான பிரச்சினை எழுந்துள்ளது. மதுக்கடைகளின் நிர்வாகச் செலவினங்களை டாஸ்மாக் நிர்வாகம் முறையாகவும், முழுமையாகவும் ஏற்காமல், அதை கடை பணியாளர்களே மேற்கொள்ள வேண்டும் என வாய்வழி வழங்கிய உத்தரவு காரணமாக ஏற்பட்டுள்ள குறைபாடுகள்தான். இந்த முறைகேடுகளுக்கு வழி வகுத்துள்ளது.

இதைத் தடுக்க, கேரள அரசு நடத்தும் மதுபானக் கடைகளில் கடைபிடிக்கப்படும் நிர்வாக விதிமுறைகளை (பில் போட்டு பணம் பெறுதல்) தமிழக அரசு பின்பற்றி டாஸ்மாக் கடைகளை நடத்த வேண்டுமென்று கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறோம் .

இது தவிர இரவு 10 மணிக்கு மேல் பணியாளர்கள் ஒரு விநாடிகூட கடைகளுக்குள் இருக்கக் கூடாது என தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் மாநகர காவல் ஆணையர்கள் உத்தரவிட்டு, தீவிரமாக அமல்படுத்தத் தொடங்கியுள்ளனர். இது பணியாளர்களுக்கு பல இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது என்பதை அரசு கருத்தில்கொள்ள வேண்டும்.

மது விற்பனை முறையில் கணினிமயமாக்கல் போன்ற நடைமுறைகள் இருப்பதால் கடைசி விநாடி வரை விற்பனை செய்ய வேண்டும். விற்பனையை முடித்த பிறகு, 30 நிமிடங்கள் முதல் 90 நிமிடங்கள் வரை கணக்குகளை சரிபார்த்து இறுதி செய்ய காலஅவகாசம் தேவைப்படும். இதை கவனத்தில் கொண்டு, மதுக்கடைகளை மூடுவது குறித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் உத்தரவு வழங்குவது அவசியமாகும் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் ஊழியர்கள் சொல்வது என்ன?

“டாஸ்மாக் கடைகளுக்கு ஏற்றி வரப்படும் மதுபான பாட்டில்களில் பெட்டிக்கு தலா ரூ.5 மற்றும் கடைக்கு தலா ரூ.200 வீதம் கணக்கிட்டு சுமைப் பணியாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதேபோல, காலி மதுபான பாட்டில்களைச் சேகரிப்பவர் மற்றும் மதுபான பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டுபவருக்கு, தினசரி தலா ரூ.800, பார் வாடகை, உடையும் மதுபான பாட்டிலுக்கான தொகை, மின் கட்டணம், இணைய வசதி, சுகாதாரம் மற்றும் வங்கிக்குச் சென்று பணம் செலுத்துவது ஆகியவற்றுக்கு பெரிய தொகை செலவாகிறது.

இதுதவிர, குறிப்பிட்டு கூற முடியாத சில செலவினங்கள் உள்ளன. ஆனால், இந்தத் தொகையை அரசு தருவதில்லை. அனைத்தும் டாஸ்மாக் கடை ஊழியர்களின் மேல்தான் விழுகின்றன. மதுபான பாட்டில்களை தற்போது கூடுதல் விலைக்கு விற்பதில்லை. ஆனால், அன்றாடம் ஏற்படும் செலவுகளுக்கு யார் பொறுப்பேற்பது?

எனவே, இந்தச் செலவினங்களை அரசே ஏற்க வேண்டும் என அலுவலர்களிடம் முறையிட்டுள்ளோம். இது குறித்து உயர் அலுவலர்களிடம் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுப்பதாக பதில் அளித்தனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவில்லை எனில் முதல்வரின் கவனத்துக்கு கொண்டுச் செல்ல திட்டமிட்டுள்ளோம்” என்றனர் டாஸ்மாக் ஊழியர்கள்.

SCROLL FOR NEXT