சென்னை: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் 54 புதிய உயர் ரக மதுபானங்களை பிற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்வதற்கான திட்டத்தை டாஸ்மாக் நிர்வாகம் வகுத்துள்ளது.
தமிழகத்தில் மதுப்பிரியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று தரமான மதுவகைகளை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிற மாநிலங்களில் இருந்து உயர் ரக மதுபானங்களை இறக்குமதி செய்து விற்பதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் அனுமதிகளை வழங்கும் நடவடிக்கைகளை டாஸ்மாக் நிர்வாகம் தீவிரப்படுத்தி வருகிறது.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் பிற மாநிலங்களில் இருந்து வெளிநாட்டு மதுபானங்களை அறிமுகப்படுத்துவதற்கான ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றோம். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கிடைக்காத பல்வேறு பிராண்ட் பீர் மற்றும் மதுபான வகைகள் கிடைக்கும். தற்போது 100 பிராண்ட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் அதில் சில மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு பிடித்தவையாக இருக்கின்றன.
நுகர்வோரின் விருப்பத்தின்படி 54 புதிய உயர் ரக பிராண்ட் மதுவகைகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறோம். இதற்கான இறுதி ஒப்புதல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்’’ என்றார்.