சென்னை: கிண்டி - அசோக் நகர் 100 அடி சாலையில் பிரேக் செயலிழந்த பெட்ரோல் டேங்கர் லாரி, அரசு பேருந்தின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பெட்ரோல் டேங்கர் லாரி ஒன்று நேற்று காலை கிண்டியிலிருந்து அசோக் நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. காசி திரையரங்கம் அருகேயுள்ள மேம்பாலத்தில் சென்றபோது, திடீரென லாரியின் பிரேக் செயலிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி, கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டிருந்த மாநகர அரசுப் பேருந்தின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பேருந்தின் பின்பகுதி மற்றும் டேங்கர் லாரியின் முன்பகுதி பலத்த சேதமடைந்தன. பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து அலறி கூச்சலிட்டனர். அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணித்தவர்களுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை.
லாரி ஓட்டுநர் சுரேஷ் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்துக்குப் பிறகு லாரியின் ஸ்டியரிங் லாக் ஆனதால், வாகனத்தை உடனடியாக நகர்த்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் மேம்பாலத்தில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. தகவல் அறிந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் மற்றும் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிரேன் உதவியுடன் சேதமடைந்த லாரி மற்றும் பேருந்தை அப்புறப்படுத்தினர்.
இந்த விபத்தால் சென்னை விமான நிலையம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருபுறமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அலுவலக நேரத்தில் ஏற்பட்ட இந்த விபத்தால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.