தமிழகம்

200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு மின் வாரியம் விளக்கம்

“மே 10-ம் தேதிக்கு பின் மட்டுமே சலுகை பொருந்தும்”

செய்திப்பிரிவு

சென்னை: 200 யூனிட் இலவச மின்​சா​ரம் வழங்​க​வில்லை என குற்​றச்​சாட்டு எழும் நிலை​யில், மே 10ம் தேதிக்கு பின் பயன்​படுத்​தும் மின்​சா​ரத்​துக்கு மட்​டுமே சலுகை பொருந்​தும் என மின் வாரிய அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

தமிழக முதல்​வ​ராக விஜய் கடந்த மே 10ம் தேதி பொறுப்​பெற்​றார். ஆட்சி பொறுப்​பேற்​றவுடன், 500 யூனிட்​டு​களுக்கு கீழ் மின்​சா​ரம் பயன்​படுத்​தும் அனைத்து வீடு​களுக்​கும் 200 யூனிட் மின்​சா​ரம் இலவச​மாக வழங்​கப்​படும் என அறி​வித்​தார். இந்த அறி​விப்பு நடுத்தர மற்​றும் அடித்​தட்டு மக்​களிடையே பெரும் வரவேற்​பை​யும், எதிர்​பார்ப்​பை​யும் ஏற்​படுத்​தி​யது.

இந்​நிலை​யில் நுகர்​வோர் சிலர் 200 யூனிட் மின்​சா​ரம் வழங்​கப்​பட​வில்லை என குற்​றஞ்​சாட்​டு​கின்​றனர். முதல்​வர் விஜ​யின் அறி​விப்​புக்கு முன் முதல் 100 யூனிட்​கள் இலவச​மாக​வும், 100 முதல் 200 வரை யூனிட்​டுக்கு ரூ.2.35-ம், 200 முதல் 400 வரை யூனிட்​டுக்கு 4.70 ரூபா​யும், 400 முதல் 500 வரை யூனிட்​டுக்கு 6.30 ரூபா​யும் கணக்​கிடப்​படும், புதிய அறி​விப்​பின் படி முதல் 200 யூனிட்​கள் இலவசம், 200 முதல் 400 வரை​யும், 400 முதல் 500 வரை​யும் ஏற்​கெனவே உள்ள முறை​யில் கணக்​கிடப்​படும்.

இந்​நிலை​யில் கடந்த சில நாட்​களுக்கு செய்​யப்​பட்ட முன் மின் கட்டண கணக்​கீட்​டில் 200 யூனிட்​டுக்கு கீழ் அதாவது 180, 190 யூனிட் பயன்​படுத்​தி​ய​வர்​களுக்​கும் மின் கட்​ட​ணம் வந்​துள்​ளது. சிறிய தொகை வந்​தா​லும், அரசு அறி​வித்​தப்​படி ஏன் தங்​களுக்கு சலுகை வழங்​கப்​பட​வில்லை என சமூக வலைத்​தளங்​களில் கேள்வி எழுப்​பி​யுள்​ளனர்.

மேலும் நுகர்​வோர் ஒரு​வர் தான் 244 யூனிட்​கள் பயன்​படுத்தி இருப்​ப​தாக​வும், அதில் 200 யூனிட் தவிர 44 யூனிட்​களுக்கு ரூ.207 மின் கட்​ட​ணம் வர வேண்​டும், அந்த தொகையே மின் வாரி​யத்​தின் செயலில் உள்ள கணக்​கீடும் காட்​டியது. ஆனால் தனக்கு மின் கட்​ட​ணம் 285 ரூபாய் என வந்​துள்​ள​தாக தெரி​வித்​தார்.

இது குறித்து மின் வாரிய அதி​காரி​கள் கூறிய​தாவது: முதல்​வர் அறி​வித்த மே 10-ம் தேதி முதல் பயன்​படுத்​தும் மின்​சா​ரத்​துக்கு மட்​டுமே 200 யூனிட் சலுகை வழங்​கப்​படும். அதற்கு முன் பயன்​படுத்​தும் மின்​சா​ரத்​துக்கு முந்​தைய கணக்​கீட்டு முறைப்​படி மின் கட்​ட​ணம் கணக்​கிடப்​படும். மேலும் மின் கட்​ட​ணம் 60 நாட்​களுக்கு ஒரு​முறை கணக்​கிடப்​படு​கிறது. தற்​போது நுகர்​வோர் 244 யூனிட் மின்​சா​ரம் பயன்​படுத்தி இருந்​தால் அவருக்கு பழைய கணக்​கீடு படி மின் கட்​ட​ணம் ரூ.441 வரும்.

ஆனால் அந்த நுகர்​வோருக்கு ஏப்​.20 முதல் ஜூன் 20 வரை கட்​ட​ணம் கணக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. அதன்​படி பார்க்​கும் போது மே 10-ம் தேதிக்கு பிறகு 40 நாட்​களுக்கு சலுகை கிடைக்க வேண்​டும். அந்த 40 நாட்​களுக்கு பழைய கணக்​கீடு படி 100 முதல் 200 யூனிட்​டுக்​கான ரூ.2.35 கணக்​கிட்டு அதை மொத்த தொகை​யுடன் கழித்து கட்​ட​ணம் நிர்​ண​யம் செய்​யப்​பட்​டுள்​ளது. மேலும் செயலியை பொறுத்​தவரை இன்​றைய நிலைக்கு கணக்​கிடும். அதாவது 200யூனிட் முழு சலுகை​யுடன் கணக்​கீட்டு குறை​வான தொகையே வெளி​யிடும்​. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

SCROLL FOR NEXT