தமிழகம்

“திரைத் துறையினர் சிலரது ‘நீட் எதிர்ப்பு’ அடிப்படை புரிதலற்றது!” - தமிழிசை விமர்சனம்

செய்திப்பிரிவு

சென்னை: “நீட் தேர்வு குறித்த உண்மைகளை உணராமல் அதை எதிர்க்காதீர்கள். திரைத் துறையினருக்கு மருத்துவ படிப்பை பற்றிய அடிப்படை புரிதல் இல்லை” என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சாடியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவப் படிப்பு குறித்த அடிப்படை புரிதல் இல்லாமலும், பிரதமர் மோடி இத்துறையை மேம்படுத்த எடுத்துள்ள துரித நடவடிக்கைகளை அறியாமலும் கலைத்துறையைச் சார்ந்த சிலர் நீட் தேர்வை எதிர்த்துப் பேசி வருகின்றனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் செயல்பாடுகளை நேரடியாகக் கண்டவள் என்ற முறையில் என்னால் சில உண்மைகளை உறுதியாகச் சொல்ல முடியும்.

நான் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்தபோது, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 10 சதவீத உள் இடஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தோம். அந்த ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவ இடங்களைப் பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்தபோது, மருத்துவக் கல்வி உண்மையாக யாருக்குச் சென்றடைய வேண்டுமோ, அந்தச் சாமானியக் குடும்பத்து மாணவர்களிடம் அது சென்றடைந்திருப்பதை கண்டு மகிழ்ந்தேன்.

ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மருத்துவராகும் வாய்ப்பைப் பெற்றிருப்பது, வருங்கால மருத்துவ உலகம் சிறப்பாக அமையப் போவதை உறுதி செய்கிறது. நீட் இல்லாத காலத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது போன்ற ஒரு மாயத் தோற்றத்தைப் போராட்டக்காரர்கள் உருவாக்குகிறார்கள். ஆனால், அப்போது வசதி படைத்தவர்கள் மட்டுமே ‘டியூஷன்’ என்ற பெயரில், பிளஸ்-1 பாடங்களைப் புறக்கணித்துவிட்டு, நாமக்கல் போன்ற இடங்களில் லட்சக்கணக்கில் செலவு செய்து பயின்று வந்தனர்.

கோடிக்கணக்கான பணம் கொடுத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் ஒரு வாய்ப்பாகவே நீட்டுக்கு முந்தைய காலம் இருந்தது. 2014-க்கு முன்பு தனியார் மருத்துவக் கல்லூரிகள் பெருகியதற்கு இதுவே காரணம்.

அன்று குறைந்த மதிப்பெண் எடுத்திருந்தாலும், பணம் இருந்தால் மருத்துவர் ஆக முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் இன்று நீட் தேர்வு அந்த முறைகேடுகளைத் தடுத்துள்ளது. மருத்துவத் துறையை இன்று பிரதமர் மோடி பெரும் அளவில் விரிவுபடுத்தியுள்ளார்.

அரசு மருத்துவக் கல்லூரிகள் 145-லிருந்து 441 ஆக உயர்ந்துள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரிகள் 242-லிருந்து 382 ஆக உயர்ந்துள்ளன. மருத்துவ இடங்கள் 51,000-லிருந்து 1,36,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணமும் இன்று முறைப்படுத்தப்பட்டுள்ளது.

உலக அளவில் அனைத்து உயர் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வுகள் இருக்கும்போது, மனித உயிரைக் காக்கும் மருத்துவத் துறைக்கு நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று கூறுவது எந்த விதத்திலும் நியாயமாகாது. உச்ச நீதிமன்றமே இதன் தேவையை உறுதி செய்துள்ளது.

எனவே, மருத்துவக் கல்வியைப் பற்றி முழுமையாகத் தெரியாதவர்கள், சாமானிய மக்களுக்குக் கிடைத்துள்ள இந்த நல்வாய்ப்பைப் புரிந்துகொள்ளாமல் எதிர்க்க வேண்டாம்” என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, டெல்லியில் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யக் கோரியும், சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நீலம் பண்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், நடிகை ஆண்ட்ரியா உள்ளிட்டோர் பங்கேற்று மத்திய அரசை கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT