தமிழகம்

“ஏமாற்றம் அளிக்கும் வெற்று பட்ஜெட்” - தமிழிசை விமர்சனம்

தமிழினி

சென்னை: “தவெக தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு இது ஏமாற்றமாகவே தெரிகிறது. இது வெற்று பட்ஜெட்” என பாஜக மூத்த தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், “இன்று தமிழக வெற்றிக் கழகத்தினால் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. தவெக தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு இது ஏமாற்றமாகவே தெரிகிறது. அதேபோல தவெக சமர்ப்பித்த வெற்று பட்ஜெட் என்று சொல்லலாம். 15 ஆண்டுகளுக்கான வளர்ச்சிக்கான பட்ஜெட் என்று சொல்கிறார்கள்; அப்படி எந்த தொலைநோக்கு திட்டமும் இல்லை.

அதேபோல கல்வித் துறைக்கு சென்ற ஆட்சியை விட குறைந்த நிதியை ஒதுக்கி இருக்கிறார்கள்; அது மட்டுமல்ல ஏறக்குறைய 2500 கோடி ரூபாய் அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு ஒதுக்கி இருப்பதாக சொல்கிறார்கள். அதில் அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு அவர்கள் சொல்லுகின்ற டிஜிட்டல் கிளாஸ் டிஜிட்டல் போர்ட் மற்றும் மேம்படுத்தப்பட்ட கல்வி முறை அனைத்தும் பிஎம்ஸ்ரீ திட்டத்திலேயே இருக்கிறது.

தெலங்கானா, கேரளம் போன்ற மாநிலங்கள் கூட அதை ஏற்றுக் கொள்கின்ற நேரத்தில் தமிழகம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது எனது கருத்து. அதே போல பல பள்ளிகள் நிறுவப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள். அது காமராஜர் பெயரில் அந்த திட்டத்தை அறிவித்திருப்பது மகிழ்ச்சி.

ஆனால், அதே நேரத்தில் நவோதயா பள்ளிகள் 40 ஆண்டு காலமாக தமிழகத்தில் கால் பதிக்க முடியாமல் இருக்கிறது. எளிமையான மக்களுக்கு இந்த நவோதயா பள்ளிகள் மிகப்பெரிய உதவியை செய்து வருகிறது.

மற்ற மாநிலங்களில் எல்லாம் இதை பின்பற்றும்பொழுது தமிழகத்திலும் நவோதய பள்ளிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது எனது கருத்து. கிராமப்புற கலை மேம்பாட்டுக்கு 250 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள்.

பிரதமர் மோடி விஸ்வகர்மா திட்டத்தில் கைவினை கைவினை கலைஞர்கள் ஏறக்குறைய எட்டரை லட்சம் பேர் உதவி கேட்டு விண்ணப்பம் செய்து இருந்தார்கள். சென்ற ஆட்சி பாராபட்சமாக இருந்ததனால் அவர்களுக்கு யாருக்குமே அந்த உதவி கிடைக்கவில்லை.

ஆக மத்திய அரசின் நல்ல திட்டங்களை ஏற்றுக்கொண்டு அது மக்களுக்கு பலனளிக்க கூடியதாக செயலாற்ற வேண்டும் என்பது நமது வேண்டுகோள். அதேபோல பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டு இருக்கிறது. அறிவிக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை.

உதாரணத்திற்கு நெய்தல் மேம்பாட்டு திட்டத்திற்கு 200 கோடி; சென்னை குண்டும் குழியும் இல்லாத சாலைகளை மேம்படுத்துவதற்கு 25 கோடி; புற்றுநோய் மருத்துவமனை நிறுவுவதற்கு பத்து கோடி; பனைமரம் மேம்பாட்டிற்கு 16 கோடி; நதிகள் இணைப்பு திட்டத்திற்கு 250 கோடி; இப்படி அந்தந்த திட்டத்தின் விரிவாக்கத்திற்கும் அவர்கள் அறிவித்திருக்கும் தொகைக்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது.

அதேபோல அவர்கள் அளித்த வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றுவதாக இந்த நிதிநிலை அறிக்கையில் எந்த உத்தரவாதமும் கொடுக்கப்படவில்லை.

மகளிர் உதவித்தொகை அதிகரிப்பதாக இருக்கட்டும், வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர் கொடுப்பதாக இருக்கட்டும், இலவச பேருந்து சேவை தமிழகம் முழுவதும் கொடுக்கிறேன் என்ற செய்தி, பயிர் தள்ளு பயிர் கடன் தள்ளுபடி இப்படி அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான எந்த திட்டமும் என்று நிதிநிலை அறிக்கையில் இல்லை.

விவசாயத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி பற்றாக்குறையாக இருக்கிறது; நாளை விவசாய பட்ஜெட் விவசாயிகளுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வரும் என்று எண்ணுகிறேன்.

பெரியவர்களுக்கு ஆன்மிக சுற்றுலா, ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட கோயில்களை சீரமைப்பது, வயது முதிர்ந்தோருக்கான நடமாடும் மருத்துவமனை, இளைஞர்கள் மேம்பாட்டிற்காக ஏழை தொழில்நுட்பத்தை ஊக்கப்படுத்துவது போன்றவை வரவேற்கத்தக்கது. ஆனால் ஒட்டுமொத்தமாக இது ஒரு பற்றாக்குறை பட்ஜெட்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT