தமிழிசை சவுந்தரராஜன்
இந்தியை திணித்த காங்கிரசுடன்தான் திமுக கூட் டணி வைத்துள்ளது. திமுகவின் பழைய காலத்து இந்தி எதிர்ப்பு நாடகம் மக்களிடம் இனி எடுபடாது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
தமிழக பாஜக சார்பில் தி.நகரில் உள்ள கமலாலயத்தில் ஹோலி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், மாநில செயலாளர் பிரமிளா சம்பத் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் திமுக எப்போதுமே பிரித்தாளும் தன்மையை கொண்டு, அதை வைத்து அரசியல் செய்யலாம் என நினைக்கிறார்கள். திமுகவால் தமிழகத்தில் தமிழ் கலாச்சாரமே சீரழிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. தமிழ்... தமிழ்... என சொல்லிக்கொண்டு தமிழரின் அடிப்படை பண்பையே குலைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழரின் அடிப்படை பண்பு என்றைக்குமே, மற்ற மாநிலங்களையோ, சகோதர சகோதரிகளையோ, துன்பப்படுத்துவதோ, வேறுப்படுத்துவதோ இல்லை.
எல்லா மதமும் சம்மதம் என பேசுபவர்கள் தான் தமிழர்கள். ஒரு மதத்தை மட்டுமே நிந்திப்பவர்கள், பிரதமர் வந்தால் அவர்களை வரவேற்காமல் புதிய பண்பாட்டை முன்னிறுத்துபவர்கள் தான் திமுக. தமிழர்களை உயர்த்துகிறேன் என்று, ஒரு தவறான முன்னுதாரணத்தை கொடுத்துக்கொண்டு, தமிழ் கலாச்சார, தமிழ் அடிப்படை பண்பையே திமுக குலைத்துக் கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் இதற்கு சரியான பதிலடியை கொடுப்பார்கள். திருச்சி தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தின் முகப்பில் சரியான தமிழ் மொழிப்பெயர்ப்பு இல்லாமல் இந்தியில் உள்ளதைப்போல அப்படியே மொழிப்பெயர்த்து பெயர் பலகை வைக்கப்பட்டிருக்கிறது.
அதை சரியாக மொழி பெயர்த்து தமிழ் மொழியிலேயே பெயர் பலகை வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறேன். ஆனால், அதிகாரிகளின் இந்த தவறால் மத்திய அரசு இந்தியை திணிப்பதாக தேவையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். என்றைக்குமே தமிழகத்தில் திணிப்பு என்பதற்கு மத்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. பாஜக அனைத்தையும் தமிழ்ப்படுத்தி கொண்டிருக்கிறது. அரசின் தோல்வியை மறைக்க நினைக்கும்போதெல்லாம், இந்தியை கையில் எடுத்துவிடுகிறார்கள்.
உண்மையில், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது இந்தியை திணித்தது. அதற்கு எதிராக திமுக போராட்டம் நடத்தியது. இந்தியை திணித்த காங்கிரஸுடன் திமுக தான் இப்போது கூட்டணி வைத்துள்ளது. உணர்வுப்பூர்வமாக பல பிரச்சினைகள் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அனைத்தையும் மூடி மறைக்க பார்க்கிறது திமுக. எனவே, திமுகவின் பழைய காலத்து இந்தி எதிர்ப்பு நாடகம் இப்போது எடுபடாது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். திமுகவின் தோல்வியை மறைக்க மீண்டும் மொழி பிரச்சினையை எடுத்து வந்தால், மக்கள் அதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
தனியார் பள்ளிகளிலும் தமிழகத்தில் இனி இருமொழி கொள்கை தான். அங்கு இந்தி சொல்லிக்கொடுக்கப்படாது. தனியார், அரசு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஒரே கல்வி தான் என்று பிரகடனப்படுத்த முதல்வர் தயாரா?
விஜய்யின் பின்னால் இளைஞர்கள் சென்று, விபத்துக்குள்ளாவது நல்லதுக்கு அல்ல. அதை கட்டுப்படுத்த வேண்டும். விஜய் ஆட்சிக்கு வருவது இருக்கட்டும். முதலில், கூட்டத்தை எப்படி கட்டுப்படுத்த வேண்டும், தொண்டர்களை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்பதை முயற்சி செய்து முன்னுதாரணமாக இருக்க வேண்டும். நடக்க உள்ள தேர்தல் எலெக்ஷன் இல்லை, எமோஷன் என விஜய் சொல்கிறார். உண்மையில், தமிழகம் புரோமோஷன் அடைய வேண்டுமென்றால், என்டிஏ ஆட்சிக்கு வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.