ரூ.5,300 கோடி முதலீட்டில் எம்ஆர்எப் தொழிற்சாலை: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

ரூ.5,300 கோடி முதலீட்டில் எம்ஆர்எப் தொழிற்சாலை: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
Updated on
2 min read

சென்னை: சிவகங்கை சிப்காட் - இலுப்பைக்குடி தொழிற்பூங்காவில், ரூ.5,300 கோடியில் 1,000 பேருக்கு வேலையளிக்கும் எம்ஆர்எப் நிறுவனத்தின் டயர் உற்பத்தி ஆலை அமைப்பதற்கான ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: எம்ஆர்எப் நிறுவனம் டயர்கள், டியூப்கள் மற்றும் பாதுகாப்புப் பட்டைகள் (Flaps) ஆகியவற்றைத் தயாரித்து, உள்நாடு மற்றும் சர்வதேச சந்தைகளில் விநியோகம் செய்து வரும் பாரம்பரியம் மிக்க நிறுவனமாகும். இந்நிறுவனம், இந்தியாவில் 10 இடங்களில் தனது ஆலைகளை நிறுவியிருந்தாலும், தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் திருவொற்றியூர், அரக்கோணம் மற்றும் பெரம்பலூர் ஆகிய இடங்களில் தனது உற்பத்தி ஆலைகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

எம்ஆர்எப் நிறுவனம் தனது வணிகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில், அடுத்த 12 ஆண்டுகளில் ரூ.5,300 கோடி உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் 1,000 பேருக்கு வேலை அளிக்கும் வகையில், சிவகங்கை மாவட்டம், சிப்காட் - இலுப்பைக்குடி தொழிற்பூங்காவில் ஒரு புதிய அதிநவீன டயர் உற்பத்தி ஆலை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.

கப்பல் கட்டுமானம்: தமிழகத்தை நிலைத்த மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட கப்பல் கட்டுமானத்தில் உலகளவில் முன்னணி மாநிலமாக நிலைநிறுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தமிழ்நாடு கப்பல் கட்டுமானக் கொள்கை 2026 வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.

கப்பல் கட்டுமானம், வடிவமைப்பு, பழுதுபார்த்தல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, திறன் மேம்பாடு ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைக்கும் முழுமையான கடல்சார் தொழில் சூழலை உருவாக்குவது இக்கொள்கையின் பிரதான நோக்கமாகும். கப்பல் கட்டுமான தளம் , பசுமைக் கப்பல் மறுசுழற்சி மற்றும் கப்பல் உதிரி பாகங்கள் உற்பத்தி போன்ற துறைகளில் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில், இக்கொள்கை விரிவான ஊக்குவிப்பு கட்டமைப்பை வழங்குகிறது. முதலீட்டில் பங்களிப்பு, சொத்து குத்தகை, மூலதன மானியம் மற்றும் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகைகள் ஆகியவற்றைக் கொண்ட அமைப்பு முறையிலான ஊக்கத்தொகுப்பு வழங்கப்படும்.

மேலும், சர்வதேச சுற்றுச்சூழல் ஒப்பந்தங்களுக்கு இணங்கச் செயல்படும் சான்றளிக்கப்பட்ட மறுசுழற்சி நிலையங்களுக்கு மூலதன மானியம் வழங்கப்படும். கப்பல் உப பாகங்கள் உற்பத்தித் துறைக்கு, வளர்ந்து வரும் துறைக்கான சிறப்பு அங்கீகாரம் வழங்கி, தமிழ்நாடு தொழில் கொள்கை 2021-ன் கீழ் ஊக்கச்சலுகைகள் வழங்கப்படும்.

சிப்காட் மற்றும் வ.உ.சி. துறைமுகம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, சிறப்பு நோக்க நிறுவனம் (SPV) அமைத்தல், ஒற்றைச் சாளர இணையதளம் மூலம் அனுமதி மற்றும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்துடன் ஒருங்கிணந்து இத்துறைக்குத் தேவையான சிறப்புப் படிப்புகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்கள், பல்தொழில்நுட்ப கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் மாநில பல்கலைக்கழகங்களின் ஒருங்கிணைப்புடன் பல்நிலை திறன் மேம்பாட்டு அமைப்பு போன்ற நிறுவன ஆதரவுகள் மூலம் இத்துறை வலுப்படுத்தப்படும்.

இதன் மூலம், உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாகி, கடற்கரைப் பகுதிகளின் வாழ்வாதாரம் மேம்பட்டு, நீல பொருளாதாரத்தில் உலகளவில் முன்னணி மையமாக தமிழகம் உருவெடுக்கும் வகையில் இந்த கப்பல் கட்டுமானக் கொள்கை 2026 வெளியிடப்படுகிறது.

இந்த நிகழ்ச்சிகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலர் நா.முருகானந்தம், தொழில்துறை செயலர் வி.அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் தாரேஸ் அகமது, எம்ஆர்எப் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கே.எம்.மாம்மன், துணைத் தலைவர் அருண் மாம்மன், மேலாண்மை இயக்குநர் ராகுல் மாம்மன் மாப்பிள்ளை, துணைத் தலைவர் டி.வி.துளசிதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ரூ.5,300 கோடி முதலீட்டில் எம்ஆர்எப் தொழிற்சாலை: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம்: இந்திய முதலீட்டாளர்களுக்கு ரூ.10 லட்சம் கோடி இழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in