கோவை: தேசிய ஜனநாயக கூட்டணியுடன் சேரும்போது தான், விஜய் அசைக்க முடியாத சக்தியாக மாறுவார் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் நேற்று அவர் செய்தி யாளர்களிடம் பேசியதாவது: திமுக அவதூறு செய்து கொண்டு இருந்ததால், அமித்ஷா அவதூறு ஷாவாகத்தான் இருப்பார். நல்லவர்களுக்கு அன்பான ஷாவாக இருப்பார்.
மத்திய அரசு மீது இதுவரை ஊழல் குற்றச்சாட்டுகள் கிடையாது. ஊழல் இல்லாமல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். இதுபோல திமுக இருக்கின்றதா? தமிழ்நாட்டில் திமுக அதிக ஊழல் செய்யும் கட்சியாக இருக்கிறது.
எங்களை பார்த்து கொண்டு இருப்பதற்கு பதிலாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறதா என பார்க்கட்டும். தேசிய ஜனநாயக கூட்டணி பலம் பெற்று வருகிறது. இண்டியா கூட்டணி வெலவெலத்து வருகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியுடன் சேரும்போது தான், விஜய் அசைக்க முடியாத சக்தியாக மாறுவார். இல்லாவிட்டால் அவர் அசைத்துப் பார்க்கின்ற கட்சியாக தான் இருப்பார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற பொறுப்பு இருக்கிறது. விஜய்க்கும் அதே பொறுப்பு இருக்கிறது. அது தனியாக முடியுமா? அணியாக முடியுமா என்பதை விஜய் யோசிக்க வேண்டும்.
சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் எதிரியை தான் எதிர்க்க வேண்டும். கொள்கை எதிரியை அல்ல. விஜய் சிந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.