தமிழகம்

“விசிகவிலும் சங்கிகள் ஊடுருவல்” - திருமாவுக்கு தமிழிசை தடாலடி

துரை விஜயராஜ்

தமிழகத்தில் சங்கிகளின் ஊடுருவலை தடுக்க முடியாது என்றும், செங்கோட்டையில் இருந்து ஜார்ஜ் கோட்டை தான் பாஜக-வின் நோக்கம் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

தமிழக பாஜக பட்டியல் சமூக அணி சார்பில் கமலாலயத்தில் நேற்று அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில பட்டியல் சமூக அணி தலைவர் பெரு.சம்பத்ராஜ், மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது: 1975-ல் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக நம் குரல்வளைகள் நெறிக்கப்பட்டது. அப்படி, நெறிக்கப்பட்ட கட்சியோடு சேர்ந்து கொண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின், “அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்கும் சமமான அங்கீகாரத்தை கொடுக்கிறது” என்கிறார்.

அரசியலமைப்பு சட்டத்தின் உறுதிமொழியை இன்று முதல்வர் ஸ்டாலின் எடுக்க முடிகிறது, திருமாவளவன் போன்றோர் அதற்கான உறுதிமொழியை அறிக்கையாக கொடுக்க முடிகிறது என்றால் அதற்குக் காரணம், பிரதமர் மோடி தான்.

அனைவருக்கும் சமமான வாய்ப்பை அரசியலமைப்புச் சட்டம் கொடுக்கிறது எனக் கூறும் முதல்வர் ஸ்டாலின், தனது ஆட்சியிலும், கட்சியிலும் மட்டும் அனைவருக்கும் சமமான வாய்ப்பைக் கொடுக்கமாட்டார். அவரது குடும்பத்தைச் சார்ந்தவருக்கு மட்டும் தான் துணை முதல்வர் பதவியைக் கொடுப்பார்.

தவெக-வில் சங்கிகள் ஊடுருவி விட்டார்கள் என திருமாவளவன் எச்சரித்துள்ளார். சங்கிகள் எல்லா இடங்களிலும் தான் ஊடுருவி இருக்கிறார்கள். இன்னும் சொல்லபோனால், விசிக-விலும் கூட சங்கிகள் ஊடுருவிக் கொண்டிருக்கிறார்கள்.

இனி நீங்கள் எச்சரிக்கையாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், எல்லா இடங்களிலும் சங்கிகளின் ஊடுருவல் இருக்கும். தமிழகத்தில் சங்கிகளின் ஊடுருவலை தடுக்க முடியாது என்பதை திருமாவளவன் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று எங்களது நோக்கம், செங்கோட்டையில் இருந்து ஜார்ஜ் கோட்டைக்கு வருவது தான். எனவே, செங்கோட்டையனின் அரசியல் நகர்வைப் பற்றி கருத்துச் சொல்ல நாங்கள் விரும்பவில்லை. யார் வேண்டுமானாலும், டெல்லிக்குப் போகலாம்.

டெல்லிக்குச் சென்றாலே கூட்டணி பேசுவதற்கு தான் எனச் சொல்வது சரியல்ல. திமுக சொல்லும் பொய்களை எல்லாம், மக்கள் இனியும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மக்கள் தெளிவாகி விட்டனர். 2026 எங்களுக்கானது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT