தமிழிசை சவுந்தரராஜன் | கோப்புப் படம்
சென்னை: கடந்த கால ஆட்சி மீது பழி சுமத்தாமல், தவறுகளை கண்டறிந்து சரி செய்ய வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தின் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்காகப் பிரதமர் நரேந்திர மோடி 7,500 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளார். இது தவிர, கூவம் மற்றும் பக்கிங்காம் கால்வாயைச் சுத்தம் செய்ய மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் பக்கிங்காம் கால்வாய் நிரம்பி குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் புகுந்து மக்கள் அவதியுற்றனர்.
தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் இந்தப் பாதிப்பு குறையும். தமிழகத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து வரும் நிலையில், கடந்த காலங்களில், மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கினார்கள்.
அரசு மருத்துவர்கள் பணி நேரத்தில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கக் கூடாது என்ற தமிழக சுகாதாரத்துறை அமைச்சரின் அறிவிப்பை நான் வரவேற்கிறேன். கடந்த காலங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை இருந்ததால் தனியார் சேவை தேவைப்பட்டது. ஆனால், தற்போது போதிய எண்ணிக்கையில் மருத்துவர்கள் உள்ளனர். எனவே, அவர்கள் அரசு மருத்துவமனைகளிலேயே முழு நேர சேவையை வழங்க வேண்டும். அதே வேளையில், கஸ்தூரிபாய் மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கைச் சீராகப் பராமரிக்க வேண்டும். குறிப்பாகக் கஞ்சா, போதைப்பொருள் புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
தற்போது அமைக்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தீவிரமாகக் கட்டுப்படுத்த வேண்டும். சிஎம்டிஏ அலுவலகத்தில் வெறும் 15 நாட்களில் 300-க்கும் மேற்பட்ட அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. மின்சாரத் துறை முறைகேடு புகாரை ஒரு வாரம் தாமதமாகவே சிபிசிஐடியிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்தத் தாமதத்தின் பின்னணியில் உள்நோக்கம் இருக்கிறதா? யாரையாவது காப்பாற்ற முயற்சி நடக்கிறதா? என்பதை அரசு விளக்க வேண்டும். நடப்பு அரசு இன்னும் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். எதற்கெடுத்தாலும் கடந்த கால ஆட்சியின் மீது பழி சுமத்தாமல், தற்போது நடக்கும் தவறுகளைக் கண்டறிந்து அவற்றைச் சரி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.