தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் காமராஜர் மக்கள் கட்சி இணையும் விழா ஈரோட்டில் நடந்தது. விழாவில் ஜி.கே.வாசன், தமிழருவி மணியன் ஆகியோருக்கு மாலை அணிவிக்கப்பட்டு வேல் வழங்கப்பட்டது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் காமராஜர் மக்கள் கட்சியை இணைக்கும் விழா ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தமாகா தலைவர் ஜி.கே வாசன் எம்.பி.தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமாகா மாநில பொதுச்செயலாளர் யுவராஜா, துணைத் தலைவர் விடியல் சேகர், மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் ஆகியோர் வரவேற்றுப் பேசினர்.
தொடர்ந்து காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் தலைமையில் அந்த கட்சியைச்சேர்ந்தவர்கள் ஜி.கே.வாசன் முன்னிலையில் தமாகாவில் இணைத்து கொண்டனர். அப்போது தமிழருவி மணியன் உள்ளிட்டோருக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.
அப்போது தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் காமராஜர் மக்கள் கட்சி இணையும் விழா உணர்வுப்பூர்வமான விழா. தமிழருவி மணியன் தலைமை தாங்கி நடத்தி வந்த காமராஜர் மக்கள் கட்சியை தமாகாவுடன் இணைப்பது யானை பலமாக இருக்கும். தமிழகத்தில் உள்ள நல்லவர்கள், மரியாதை உள்ளவர்கள் நம்மோடு சேரும் காலம். அதற்கு அடித்தளமாக தமிழருவி மணியன் இருக்கிறார். அவரது இயக்கத்தின் தொண்டர்கள், பொறுப்பாளர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன். நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
முத்துடன் மாணிக்கம் சேர்வது போல தமாகாவுடன் காமராஜர் மக்கள் கட்சி இணைவது தங்கத்துடன் வைரம் சேர்வது போல இருக்கிறது. மகாத்மா காந்தி, காமராஜர், மூப்பனார் ஆகிய மூன்று பேரும் முன்னோடிகள், வழிகாட்டிகள். இந்த இணைப்பு லட்சியத்திற்கு, கொள்கைக்கான இணைப்பு. உலக தமிழர்கள் மற்றும் அரசியல் தலைவர்களால் மதிக்க கூடிய தலைவர் தமிழருவி மணியன். காமராஜர், மூப்பனாருடன் நெருங்கி பழகியவர். தமிழருவி மணியன் தனக்கு சரி என்று பட்டதை மட்டும் பேசும் துணிச்சல் மிக்க தலைவர். பொது வாழ்க்கையில் லாபம் நஷ்டம் பார்க்காமல் செயல்பட்ட தலைவர். இதனால் இழந்தது ஏராளம். இருந்தாலும் நல்ல நண்பர்களை பெற்று இருக்கிறார்.
மக்கள் நலம் சார்ந்து செயல்படக் கூடியவர் தமிழருவி மணியன். அவர்விரும்பி சமரசம் செய்து இருந்தால் எவரும் எட்ட முடியாத உயரம், பதவிகளை பெற்று இருப்பார். எல்லாம் தெரிந்த தமிழருவி மணியனுக்கு சமரசம் தெரியாது. காந்தியடிகளை வணங்குவது காமராஜரின் கொள்கையை பரப்புவது தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவது தான் தெரியும்.
வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்று உருவாக்க தமிழருவி மணியன் தன்னை அர்ப்பணித்து கொள்ள வேண்டும். இந்த இணைப்பு விழாதான் எங்கள் இருவரையும் இணைத்து இருக்கிறது என்பது தவறு. பெருந்தலைவர் காமராஜருக்கு பிறகு மூப்பனார் தலைமை ஏற்று செயல்பட்டார். மூப்பனார் மறைவுக்கு பிறகு என்னுடைய வளர்ச்சிக்கு பாடுபட்டார்.
அகில இந்திய அளவில் என்னுடைய வளர்ச்சி உயர்வில் அக்கறையுடன் தமிழருவி மணியன் செயல்பட்டார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உயர வேண்டும், வளர வேண்டும் என்று உதவியாக இருந்தவர் தமிழருவி மணியன். நான் எடுக்கும் முடிவுகள் தொடர்பாக தமிழருவி மணியனுடன் தொடர்ந்து ஆலோசனை செய்து வந்து இருக்கிறேன். எனக்கு பல நேரங்களில் பல முடிவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 12 ஆண்டுகளாக மலர் படுக்கையில் பயணிக்கவில்லை என்று தமிழருவிமணியனுக்கு தெரியும். முள்படுக்கையில் படுக்க வேண்டும் அதிலிருந்து மீட்க வேண்டும் என பிறந்த நாள் பரிசாக அவர் கட்சி இணைப்பை நடத்தி இருக்கிறார். வெற்றி தோல்வி தாண்டியும் மரியாதையுடன் பயணிக்க தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஒரு கூட்டு குடும்பம்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைந்த மூத்த தலைவர் தமிழருவிமணியன், துணை நின்ற அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றியும். இவ்வாறு அவர் பேசினார்.