"திமுக கூட்டணியில் இருக்கும் லெட்டர் பேடு கட்சிகளுக்கும் ஒரு சீட், நமக்கும் ஒரு சீட் தான் என்றால் எப்படி சரியாக இருக்கும்? நமக்கான அங்கீகாரம் இல்லையெனில், கூட்டணியில் தொடர்வது குறித்து மறுபரீசிலனை செய்ய தயங்கக்கூடாது” என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் நிர்வாகிகள் கொந்தளித்து வருகிறார்கள்.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு கடந்த முறையைப் போலவே, இம்முறையும் ஒரு சீட் ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது. இது, அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது அக்கட்சியின் கட்சியின் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் கோபமாக வெளிப்பட்டு வருகிறது.
தேர்தல் கூட்டணி தொடர்பாக தவாக நிர்வாகிகள் உடனான கருத்துக் கேட்புக் கூட்டங்கள் சென்னையில் உள்ள தவாக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் தி.வேல்முருகன் தலைமையில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் 28 மாவட்டங்களின் தலைவர்கள், செயலாளர்கள், 234 தொகுதிகளின் தலைவர், செயலாளர்கள் பங்கேற்று தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அக்கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், “நமது கட்சியில் லட்சக் கணக்கானோர் இணைந்துள்ளனர். உளவுத் துறைக்கும் இந்த உண்மை தெரியும். இருப்பினும், இம்முறையும் நமக்கு ஒரு சீட் தான் என்றால் ஏற்றுக்கொள்ள முடியாது. லெட்டர் பேடு அமைப்புகளுக்கு ஒரு சீட் ஒதுக்குவது போல், ஓர் அரசியல் கட்சியாக கடந்த 15 ஆண்டுகளாக வெற்றிகரமாகச் செயல்படும் நம்மையும் ஒரே தராசில் வைத்துப் பார்ப்பது ஏற்புடையது அல்ல.
2 மாவட்டங்களில் மட்டுமே கட்சியை நடத்துபவர்களுக்கு ஒரு எம்பி சீட், 3 எம்எல்ஏ சீட்களைத் தருகிறார்கள். அவர்களைக் காட்டிலும் பலமாக இருக்கும் நமக்கு இம்முறை ஒரு ராஜ்ய சபா சீட்டும் 3 எம்எல்ஏ சீட்களும் தர வேண்டும். அப்படி இல்லாவிட்டால், ஓரிரு இடத்தை வாங்கி அசிங்கப்படாமல் ஒரு ராஜ்ய சபா சீட்டும் உள்ளாட்சி தேர்தலில் மேயர் உள்ளிட்ட பதவிகளையும் கேட்க வேண்டும்” என்று சொன்னார்களாம்.
இன்னும் சில நிர்வாகிகள், “வன்னியருக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்றாதது, சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாது உள்ளிட்ட காரணங்களால் திமுக வன்னியருக்கு எதிரான கட்சி என்ற அதிருப்தி வன்னியர் இளைஞர்கள் மத்தியில் பரவலாக உள்ளது. போதாதுக்கு, திமுக-வை தமிழ்த்தேசியத்துக்கு எதிரான கட்சி என சீமான் தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார். இதற்கெல்லாம் பதில் சொல்ல திமுக-வுக்கு நமது தயவு தேவை. எனவே, நமக்கான உரிய அங்கீகாரத்தைத் தர திமுக மறுத்தால் முடிவை மறுபரிசீலனை செய்வதில் தப்பில்லை” என்றும் சொன்னார்களாம்.
இதனிடையே அதிமுக கூட்டணியில் தவாக-வை இணைப்பது தொடர்பாக இரண்டாம்கட்ட தலைவர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடப்பதாகச் சொல்லப்படுகிறது. பாமக தரப்பில் அன்புமணி அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள அதேசமயம், ராமதாஸ் தரப்பால் இழப்பாகும் வாக்குகளை ஈடுகட்ட வேல்முருகனை கூட்டணிக்குள் கொண்டுவரலாம் என நினைக்கிறதாம் அதிமுக.
இருந்த போதும் திமுக கூட்டணியில் தொடரவே விருப்பப்படும் வேல்முருகன், திமுக இம்முறை தனக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்கும் என்ற நம்பிக்கையில் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.