சென்னை: தேசிய பேரிடர் மீட்புப்படை போட்டியில் தமிழக பேரிடர் மீட்புப் படை அணி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
இதேபோல், அகில இந்திய காவல் துறை வாத்தியக் குழு போட்டியிலும் தமிழக காவல் துறை அணி 3-வது இடத்தைப் பிடித்து பெருமை சேர்த்துள்ளது. வெற்றிபெற்ற வீரர்களை டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் நேரில் அழைத்து பாராட்டினார்.
உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் 8-வது பட்டாலியனில், கடந்த நவம்பர் 2 முதல் 4-ம் தேதி வரை நடைபெற்ற தேசிய அளவிலான சிபிஆர்என் (வேதியியல் பொருட்கள், உயிரியல் காரணிகள், கதிரியக்கப் பொருட்கள் மற்றும் அணுசக்தி தொடர்பான ஆபத்துகள் அல்லது அவசரநிலைகளை எதிர்கொண்டு மீட்புப் பணிகளை மேற்கொள்ளுதல்) போட்டியில், தமிழக பேரிடர் மீட்புப் படையின் 13-வது அணியினர் தெற்கு மண்டலம் சார்பில் பங்கேற்றனர்.
நான்கு மண்டலங்களைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியில், தமிழக அணி முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. கடந்த 2025-ம் ஆண்டும் தமிழக அணி முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் கடந்த நவம்பர் 16 முதல் 20-ம் தேதி வரை நடைபெற்ற 27-வது அகில இந்திய காவல் துறை வாத்தியக் குழு போட்டியில், தமிழக காவல்துறை அணி ஆண்கள் பிரிவுக்கான 'பியூகிள் கால்' போட்டியில் 3-வது இடத்தைப் பிடித்தது. இப்போட்டியில் மத்திய பாதுகாப்புப் படைகள் மற்றும் மாநில காவல் துறைகளைச் சேர்ந்த மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன.
இந்த இரு போட்டிகளிலும் சாதனை படைத்த அதிகாரிகள் மற்றும் காவலர்களை, டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் இன்று நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் டிஜிபிக்கள் ஆர்.தினகரன், அன்பு மற்றும் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உடனிருந்தனர்.